அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிய பார்க்க ஜனவரி 14ம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வரும் அதே நாளில் ராகுல் காந்தியும் வர உள்ளார்.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் அன்று தமிழர்களின் பாரம்பரிய விழாவான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. கொரோனா பிரச்சனையால், இந்த முறை ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி வழங்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஜனவரி 14ம் தேதி அவனியாபுரம், 15ம் தேதி பாலமேடு, 16ம் தேதி அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. 

இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிய பார்க்க ஜனவரி 14ம் தேதி முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். அதன்பின்னர் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். 

இதனிடையே, ராகுல்காந்தி வரும் அன்றையே தினம் துக்ளக் பத்திரிக்கை விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வர உள்ளார். இரு பெரும் தேசிய தலைவர் தமிழகம் வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.