சேலம்

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி பேசியிருப்பதால் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பில் "தொழில் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைப்பெற்றது. 

இந்தக் கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். 

கருத்தரங்கிற்கு பிறகு தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், "வழக்கறிஞர் சங்க தேர்தல் முறைகேடு இல்லாமல் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறவில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்து இருப்பது தமிழகத்திற்கு விரோதமான செயல். 

கர்நாடக தேர்தலை கருத்தில்கொண்டு வாரியம் அமைக்க காலதாமதம் செய்யும் முயற்சியை மத்திய பாஜக அரசு மேற்கொள்கிறது. 

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக பேசிய ராகுல்காந்தியின் கருத்தை வரவேற்கிறேன். இதற்காக சோனியாகாந்தி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் பேசினார்.