Rahul Gandhi encouraged Congress IT team

குஜராத் மாநிலத் தேர்தல் குறித்து அந்த மாநில காங்கிரஸ் ஊடக, தகவல்தொழில்நுட்ப அணியிருடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று கலகலப்புடன் ஆலோசனை நடத்தினார்.

இரு கட்ட தேர்தல்
குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் ஜனவரி மாதம் முடிய உள்ளது. இதையடுத்து, குஜராத் மாநிலத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்த தேர்தல் அணையம் அறிவித்துள்ளது.

ஆலோசனை

இந்நிலையில், அம்பாஜி நகரில் மாநில ஊடகம் மற்றும் ஐ.டி.பிரிவினருடன் ராகுல் காந்தி நேற்று கலந்தாய்வு நடத்தினார். அப்போது மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் காங்கிரஸ் ஊடக பிரிவினரையும், தகவல்தொழில் நுட்ப பிரிவினரையும் வெகுவாக ராகுல்காந்தி பாராட்டிப் பேசினார்.

ராகுல்காந்தி செய்யும் டுவிட்கள் அனைத்தும் அவர் செய்வதில்லை, போலியானது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது. இது குறித்து, சமீபத்தில் ராகுல்காந்தி தன்னுடைய செல்ல நாய் ‘பிடி’யின் வீடியோவை பதிவிட்டு டுவிட் செய்திருந்தார். இது குறித்து ஐ.டி. ஆர்வலர்கள் ராகுலிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ராகுல் பதில் அளிக்கையில், “ நீங்கள் ‘பிடி’ டுவிட் குறித்துதானே கேட்கிறீர்கள். நான் எந்தவிதமான கருத்துக்களைக் கூறினாலும், எனது குழுவினருடன் கலந்து பேசி ஆலோசித்து செம்மைபடுத்திய பின் டுவிட்டரில் தெரிவிக்கிறேன். அனைத்தும் என்னுடைய கருத்துக்கள்’’ என்று தெரிவித்தார்.

மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்

ஊடக ஆர்வலர்களைப் பார்த்து ராகுல் பேசுகையில், “ உங்களைக் சுற்றி இருப்பவர்களைப் பாருங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். ஆனால், இதற்கு எதிர்மாறாக, பா.ஜனதாவின் கூட்டத்தைப் பார்த்தால் இறுகிய முகத்துடன், மகிழ்ச்சியின்றி இருப்பார்கள். சிரிக்கவே மாட்டார்கள்

சிரிக்ககூட இல்லை

சமீபத்தில் என் சகோதரி பிரியங்கா என்னிடம் ஒரு தகவலைக் கூறினார். விமானத்தில் சென்றபோது பா.ஜனதா தலைவர்கள் 4 பேர் அவரின் இருக்கைக்கு முன் அமர்ந்திருந்தனர். விமானப்பயணம் முடியும் வரை பிரியாங்காவுடன் ஒருமுறைகூட அவர்கள் சிரிக்கவில்லை என என்னிடம் கூறினார். 

இந்த வழியில்தான் பா.ஜனதா கட்சியும், அதன் ஐ.டி. பிரிவினரும் மக்களிடம் வெறுப்பை பரப்புகிறார்கள். ஆனால், உங்களால் வெறுப்பைப் பரப்ப முடியாது. உங்கள் வாழ்நாள் முழுவதும் வாய்ப்பு கொடுத்தால்கூட வெறுப்பை பரப்பமுடியாது. அதற்கு காரணம், நீங்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள்.

ரேடியோவை ‘டியூன்’ செய்வதைப் போல், மோடி உண்மைகளை மட்டும் தெளிவாகப் பேச வேண்டும். காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனையிலும், சுய முன்னேற்றத்திலும் நம்பிக்கை வைத்துள்ளது.

யார் தவறு?

ரூபாய் நோட்டு தடையும், ஜி.எஸ்.டி.யும் யாருடைய தவறுகள். மோடியின் தவறுகள். சமூக ஆர்வலர் அல்லது அரசியல்வாதி ஒரு தவறைச் செய்தால், அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அதுதான் நமக்கும் அவர்களுக்கும் இடையிலான வேறுபாடு என்று தெரிவித்தார்.

கவலையில்லை

தங்களின் சுயத்தை குறித்த பா.ஜனதா அவதூறாகப் பிரசாரம் செய்து வருவது குறித்து ஊடகத்தினர் கேட்டனர். அப்போது ராகுல் காந்தி பதில் அளிக்கையில், “ எனக்கு என்னைப் பற்றி தெரியும். என் செயல்குறித்தும் தெரியும். என் ஆளுமையை , சுயத்தை சிதைக்க பா.ஜனதா எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் கவலையில்லை. எவ்வளவு பணம் செலவு செய்தாலும் கவலையில்லை. என்னுடைய உண்மை என்றும் மாறாது. அதை மக்களும் பார்பார்கள். 

குஜராத்தில் எங்கு சென்று மக்களைச் சந்தித்தாலும் ஊழல் பெருகிவிட்டது என்கிறார்கள். சூரத்தில் சிறிய வர்த்தகர் கூட ஊழல்குறித்து கூறுகிறார். ஆனால், மோடியோ குஜராத்தில் ஊழலை இல்லை என்கிறார்’’ என்று தெரிவித்தார்.