ஒரு அரசாங்கத்தை எப்படி அமைக்க வேண்டும் என்ற வியூகம் தெரியாதவர் ராகுல் காந்தி என பாஜகவின் ஹிமந்த பிஸ்வாஸ் விமர்சித்துள்ளார்.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிபுராவில் பாஜக தனிப்பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதியானது. ஆனால், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தது.

மேகாலயாவில் ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 21 எம்.எல்.ஏக்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது. ஆனால், மேகாலயாவில் வெறும் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றிய பாஜக, தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி மற்றும் சுயேட்சைகளுடன் கைகோர்த்துள்ளது. அதனால் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

அதேபோல, நாகாலாந்திலும் என்டிபிபி -பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது. மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியாக இருந்தும்கூட ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் இழந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் வியூகங்கள் சரியில்லாததே மேகாலயாவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காரணம்.

இந்நிலையில், மேகாலயாவில் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை உருவாக்க முக்கிய பங்காற்றிய பாஜகவின் ஹிமந்த பிஸ்வாஸ் கூறுகையில், ஒரு ஆட்சியை எப்படி அமைக்க வேண்டும் என்ற வியூகங்களை வகுக்காமலேயே, 4 பேரை மேகாலயாவிற்கு அனுப்பிவைக்கிறார் ராகுல் காந்தி. ஆட்சியை அமைக்க தேவையான வியூகங்களை ராகுலுக்கு வகுக்க தெரியவில்லை. அவரது அனுபவமின்மையாகவே இதை நான் பார்க்கிறேன் என விமர்சித்துள்ளார்.