சாத்தான்குளத்தில் ஜெயராஜ் - பெனிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த விவகாரத்தில் அரசு நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சாத்தன்குளத்தில் ஜெயராஜ் - பெனிக்ஸ் இருவரும் போலீஸார் தாக்கியதில் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்துக்கு அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் அகில இந்திய அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயராஜ் - பெனிக்ஸ் மரணத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “போலீஸார் மிருகத்தனமாக நடந்துகொள்வது மிகவும் கொடூரமான குற்றம். மக்களைப் பாதுக்க வேண்டியவர்கள் ஒடுக்குமுறையாளர்களாக மாறுவது சோகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் அரசு நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.