காஷ்மீர் மாநில  நிலவரத்தை பார்வையிட ராகுல் காந்தி அங்கு செல்ல உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு  காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துவருகிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த  ராகுல் காந்தி, ‘காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. இந்த விவகாரத்தை பிரதமர் மோடி வெளிப்படைத் தன்மையுடன் கையாள வேண்டும்’ என்று தெரிவித்தார். ராகுல் காந்தியின் கருத்துக்கு காஷ்மீர் மாநில துணைநிலை ஆளுநர் சத்யபால் மாலிக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘காஷ்மீருக்கு வரவேண்டும் என்று ராகுல் காந்திக்கு நான் அழைப்புவிடுக்கிறேன். காஷ்மீருக்கு வருவதற்காக நான் உங்களுக்கு விமானம் அனுப்புகிறேன். வந்து களத்தைப் பார்த்துவிட்டு பின்னர் அதுகுறித்து பேசவேண்டும். நீங்கள் ஒரு பொறுப்பான தலைவர். இதுபோன்று நீங்கள் பேசக்கூடாது. வெளிநாட்டு ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுகின்றன. எல்லா மருத்துவமனைகளும் திறந்தநிலையிலேயே உள்ளன. ஒருவராவது துப்பாக்கிக் குண்டுகளுக்கு காயமடைந்துள்ளனரா என்பதை நிருபித்துக் காட்டுங்கள். நான்கு பேருக்கு மட்டும் பெல்லட் குண்டுகளால் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. யாருக்கும் பெரிய அளவிலான காயம் ஏற்படவில்லை’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மாலிக் அழைப்பை ஏற்று ட்விட்டரில் பதிவிட்ட ராகுல், ’’எதிர்கட்சி தலைவர்களுடன் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை, நேரில் சென்று பார்வையிட தயாராக இருக்கிறேன். இதற்காக சிறப்பு விமானம் அனுப்பத் தேவையில்லை. அங்குள்ள மக்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்தித்து சுதந்திரமாக உரையாடுவதற்கான வாய்ப்பினை உறுதி செய்யுங்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார்.