இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவிவருவதால், டிவிஎஸ் உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வேலைநாட்களை குறைத்துள்ளது. மேலும் பார்லே-ஜி உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் பல ஆயிரம் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலையை சமாளிக்க பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் போர்டு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 51 கோடி ரூபாயை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கடந்த 2018ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் ஒரு லட்சம் கோடி பணத்தை மத்திய அரசு கேட்டதாகவும், ஆனால், அதனை வழங்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகின. அந்த சமயத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேல் பதவிக் காலம் முடியும் முன்னரே ராஜினாமா செய்தது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுதொடர்பாக இன்று  தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தாங்களே சுயமாக ஏற்படுத்திய பொருளாதார பேரழிவை எவ்வாறு சமாளிப்பது என திணறி வருகின்றனர். 

ரிசர்வ் வங்கியிலிருந்து பணத்தைத் திருடுவது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது. இது துப்பாக்கிச் சூட்டில் குண்டடி காயம் பட்டவருக்கு மெடிக்கல் ஷாப்பிலிருந்து பேன்ட்-எய்டை திருடி ஒட்டுவது போன்றதாகும் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்