கொரோனா வைரசால் உலகம் இந்த அளவுக்கு முடங்கும் என்று யாரும் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு போல இரண்டாம் உலகப்  போரின் போதுகூட ஊரடங்கு இருந்திருக்காது எனவும் அவர்  விமர்சித்துள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இந்தியாவில் வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் குறித்து தொழிலாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், சுகாதார நிபுணர்கள் என பலருடனும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடி வருகிறார். இந்தியாவின் பொருளாதாரநிலை மற்றும் அதன் தாக்கம் குறித்து ராகுல் காந்தி ஏப்ரல் 30ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுடன் உரையாடினார். அதைத் தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் உரையாடினார்.

சில தினங்களுக்கு முன்பு உலக பொது சுகாதார நிபுணர்களான ஹார்வர்ட் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிட்யூட்டின் பேராசிரியர் ஆஷிஷ் ஜா மற்றும் ஸ்வீடிஷ் தொற்றுநோயியல் நிபுணர் ஜோஹன் கீசெக் ஆகியோரிடமும் பேசினார். இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொழில் முடக்கம் குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவன இயக்குனர் ராஜீவ் பஜாஜ் உடன் கலந்துரையாடினார், அப்போது பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து தான் ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டது என கூறுகிறேன், உலகிலேயே ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் நோய் அதிகரிப்பது இங்குதான், தற்போது இதிலிருந்து பின்வாங்கியுள்ள மத்திய அரசு மொத்த பொறுப்பையும் மாநிலங்கள் மீது  விட்டுவிடப்போகிறது, இந்தியாவில்  நடைமுறை படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மக்கள் மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அச்சத்தை நீக்கி நாம் முன்னேற முடியும் என மக்களுக்கு பிரதமர் நம்பிக்கை அளிக்க வேண்டும்,  மக்கள் இந்த தொற்று நோயை கண்டு அஞ்ச வேண்டாம் என பிரதமர் ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிக்க வேண்டும் என்றார். 

மேலும் நீங்கள் நோயின் தன்மையை மாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள், தற்போது மக்கள் மத்தியில் இருந்து நோய் பற்றிய எண்ணத்தை மாற்றியமைக்க ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு நேரம் எடுக்கப் போகிறது,  இந்த ஊரடங்கை மத்திய அரசு தொடங்கி வைத்துள்ள நிலையில் அதை எப்படி முடித்து வைப்பது என தெரியவில்லை.  முடித்து வைப்பது என்பது எளிதான காரியமல்ல. இது மிகவும் சிக்கலாக இருக்கப்போகிறது என அவர் தெரிவித்துள்ளார். உண்மையில் கொரோனாவால் உலகம் இந்த அளவிற்கு முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள், உலகப்போரின் போது கூட இந்த அளவிற்கு முடக்க நிலை ஏற்பட்டிருக்காது என நினைக்கிறேன், இது உண்மையிலேயே மிகப்பெரிய பேரழிவு என அவர் தெரிவித்துள்ளார்.  அப்போது ராகுலுடன் உரையாடிய பஜாஜ்,  மத்திய அரசு ஒரு கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியது எந்த நாடுகளிலும் அந்த அளவுக்கு கொடுமையான ஊரடங்கு இல்லை. இந்தியாவில் மட்டும்தான் மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை, இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்ட  ஊரடங்கு மிகக் கடுமையானது.  பணக்காரர்களுக்கு வீடு வசதியான சூழ்நிலையில் இருப்பதால் அவர்களால் அதை சமாளிக்க முடியும், ஆனால் இது ஏழைகளுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும் முற்றிலும் அழிவுகாரமான ஒரு நடவடிக்கை என அவர் விமர்சித்துள்ளார்.