கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. முக்கியமாகப் பல தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற உத்தரபிரதேச மாநில  அமேதி தொகுதியில் இம்முறை  ராகுல் படுதோல்வி அடைந்தார். ஆனால் போட்டியிட்ட கேரள மாநிலம் வயநாட்டில் பெரு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் தனக்கு வாக்களித்த மக்களுக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி இன்று மதியம் கேரளா  வந்தார். அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டனர். அவர்களிடம் ராகுல் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அவர் கேரளாவில் தங்கவுள்ளார்.

இதுபோன்று பிரதமர் மோடியும் இன்று இரவு 11.30 மணியளவில் கேரளா வருகிறார்.  போர்ட் சிட்டியில் உள்ள அரசு விடுதியில் தங்கும் அவர், நாளை காலை குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் வழிபடவுள்ளார். இதைத்தொடர்ந்து குருவாயூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு நண்பகலுக்கு மேல் டெல்லி செல்கிறார்.

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு பிரதான கட்சித் தலைவர்களும் ஒரே நாளில் கேரளாவுக்குச் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது