பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகிய இரண்டும் மத்திய அரசால் முறையாக திட்டமிடப்படாத நடவடிக்கைகள் என ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கடுமையாக சாடியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், தற்போது நியூயாரக்கில் உள்ள சிக்காகோ பல்கலைக்கழகத்தில் நிதித்துறை பேராசாரியராகப் பணியாற்றி வருகிறார். இந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்த பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் குறித்த கருத்தரங்கில் ரகுராம் ராஜன் பங்கேற்றுப் பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ரகுராம் ராஜன், இந்தியாவில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிகப்பெரிய சீர்திருத்தங்களாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையையும் நடைமுறைப்படுத்தியது. இவை இரண்டுமே மிகச்சிறந்த நடவடிக்கைதான். ஆனால், அவை நடைமுறைப்படுத்திய விதம்தான் தவறானதாகும். ஒருவேளை சிறப்பாக, திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி இருந்தால் பலன்கள் நல்லவிதமாக கிடைத்திருக்கும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கும்போது, மத்திய அரசு என்னிடம் ஆலோசித்தது. ஆனால், ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவிக்கும் போது, திட்டமிட்டுச் செயல்படுங்கள், எனக்கு இதை உடனடியாக அமல்படுத்துவதில் உடன்பாடில்லை என்று தெரிவித்தேன்.

ஆனால், மிக மோசமாகத் திட்டமிட்டு, ஒரே நாள் இரவில், நாட்டில் மக்களிடம் 87.5 சதவீதம் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது நல்ல செயல் அல்ல.

நாட்டில் 87 சதவீதம் புழக்கத்தில் இருக்கும் உயர் மதிப்பு கொண்ட பணத்தை செல்லாது என அறிவிக்கும் முன், அதற்கு ஈடாக மற்றொரு மதிப்பிலான பணத்தை அச்சடித்து மக்களிடம் புழக்கத்தில் விடத் தயாராக வைத்திருக்க வேண்டும். இதை மத்திய அரசு செய்யவில்லை.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நீண்டகாலப் பாதிப்புகளைப் பார்த்துவிட்டோம். மக்கள் கைகளில் பணமில்லாமல் சாலைகளில் அலைந்தார்கள். கடைகளில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. குறிப்பாக அமைப்புசாரா துறையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். சிறு,குறுந்தொழில்கள் முடங்கின. பொருளாதாரத்தில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதகமான விஷயங்கள் ஏதுமில்லை. அந்த நடவடிக்கை முக்கியமானதா என்பது கூட எனக்கு தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அந்த நேரத்தில் அரசுக்கு சரியாக தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்கு உடன்பாடில்லை என ரகுராம் ராஜன் பேசியுள்ளார்.