ரஜினியின் படங்களிலேயே பாக்ஸ் ஆபீஸை தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டு, வசூலில் அள்ளிக் கொட்டிய படமென்றால் அது ‘பாட்ஷா’தான். அதில் ’மாணிக்கம்....மாணிக்கம்’ என்று சூப்பர் ஸ்டாருக்கு சூடேற்றிய ஹீரோயின் நக்மா இப்போது காங்கிரஸில்தான் இருக்கிறார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். 

மகிளா காங்கிரஸ் எனப்படும் காங்கிரஸின் மகளிரணியில் தேசிய பொறுப்பிலிருக்கும் நக்மா, சமீபத்தில் தமிழக காங்கிரஸின் மகளிரணி தலைவியான ஜான்ஸிராணி மீது ஒரு பொளேர் விமர்சனத்தை வைத்துவிட, பற்றிக் கொண்டு எரிகிறது விவகாரம். அதாவது தமிழக மகிளா காங்கிரஸின் தலைவியான ஜான்சிராணியின் செயல்பாடுகள் சரியில்லை என்று பல மாதங்களாகவே கட்சிக்குள் புகைச்சல். ‘இந்தம்மா ஏன் இந்த பொறுப்புல இருக்குது? எந்த அரசியல் நிர்வாக தகுதியும் இல்லாத இவரை இந்தப் பதவியில் ஏன் அப்போ  மாநில தலைவராக இருந்த இளங்கோவன் நியமிச்சாருன்னே தெரியலை. கட்சிக்கு எந்த நன்மையையும் உருவாக்காத இந்தம்மாவை பதவியிலிருந்து தூக்குங்க!’ என்று ஓலைகள் டெல்லிக்கு போய்க் கொண்டே உள்ளன. 

இதைப் பார்த்துவிட்டு நக்மாவும் “ஆமாங்க, கட்சியின் மாநில அணியை தலைமை தாங்கி நடத்தும் தகுதியெல்லாம் ஜான்ஸிக்கு இல்லை. எந்த ஒரு கட்சிக்குமே மகளிரணி முக்கியம். ஆனால் தமிழக காங்கிரஸை பொறுத்தவரையில் மகளிர் அணி ரொம்பவே வீக்கா இருக்குது. அநேகமா வரும் மார்ச் மாசத்துக்குள் அவரை மாத்திடுவாங்க.” என்று தடாலடியாக ஒரு பேட்டியை தட்டிவிட்டார். 

இது ஜான்ஸியின் கவனத்துக்கு போக அவர் செம்ம டென்ஷனாகிவிட்டாராம். மேலும் கட்சி நிர்வாகி ஒருவருடன் ஜான்ஸிராணி மலேசியாவுக்கு டூர் போனதாகவும் தமிழக காங்கிரஸினுள் ஒரு வில்லங்க தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது. தன் மனதை காயப்படுத்தும் இந்த தகவலையும் நக்மாதான் கிளப்பிவிட்டுள்ளார் என்பதும் ஜான்ஸியின் எண்ணம். இதனால் “நான் இந்த பதவியில் மிக சிறப்பாக செயல்பட்டு, மகிளா காங்கிரஸை எழுச்சியோடு நடத்தி வருகிறேன். அதை என்னால் நிரூபிக்க முடியும். ஆனால் என் மேலே அரசியல் பகையால் நக்மா போன்றவர்கள் பொய் புகாரை கிளப்புறாங்க.” என்று பதிலடி தந்திருக்கிறார். 

இது போதாதென்று ’என் இமேஜை பர்ஷனலாக டேமேஜ் செய்கிறார் நக்மா!’ என்று ஜான்ஸிராணியின் தரப்பிலிருந்து நக்மா மீது ஒரு புகார் ராகுலுக்கு சென்றிருக்கிறது. இதற்கு நக்மாவும் பதிலடியாக ஜான்ஸிக்கு எதிராக மேலும் சில புகார்களை கொளுத்திப் போட்டுள்ளார். ரெண்டு பெண்களுக்கு இடையிலான பிரச்னையில் ராகுலின் தலைதான் உருளுது பாவம்!