தொடர் தோல்விகளின் போது தனது அமைப்பை ஒட்டுமொத்தமாக பரிசோதனை செய்து, சுய பரிசோதனைகளிலும் இறங்கி, வெற்றியாளர்களின் சூட்சமத்தை தானும் கற்றுக் கொண்டால்தான் அடுத்த  போட்டியில் வெற்றியை தொட முடியும். ஒரு நல்ல வழிகாட்டிக்கு, தலைவனுக்கு இதுதான் அழகு. ராகுல்காந்தியும் இதைத்தான் பின்பற்ற துவங்கிவிட்டார், ஆனால் அதற்காக ஆர்.எஸ்.எஸ்.ஸை பின்பற்றிட முடிவு செய்து இப்படி கட்சியின் மானத்தை வாங்க வேண்டுமா? என்று கொதிக்கின்றனர் காங்கிரஸார். 
என்ன பிரச்னை?


நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட கடும் தோல்விக்குப் பிறகு, தலைவர் பதவியிலிருந்து விலகிய ராகுல் சுய பரிசோதனையில் இறங்கியிருக்கிறார். அதேபோல் கட்சியின் நலனுக்கு பயன் தரும் சில யோசனைகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பை போல் காங்கிரஸுக்கும் முழு நேர ஊழியர்கள் தேவை’ என்று போட்டாரே ஒரு போடு. கடும் கோபத்தில் கலங்கிவிட்டது காங்கிரஸ் கட்சி. ‘பூனையை பார்த்து புலி ஏன் சூடு போட்டுக் கொள்ள வேண்டும்?’ என்றெல்லாம் கொதிக்க துவங்கிவிட்டனர் சீனியர் நிர்வாகிகள். 
ஆனால் அதேவேளையில் பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளோ ராகுலின் முடிவை பார்த்து சிரிக்கின்றனர்  மர்மமாக. 
இதைப் பற்றி கருத்து சொல்லியிருக்கும் பா.ஜ.க.வின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா “ஆர்.எஸ்.எஸ். பக்கம் திரும்பியிருக்கும் ராகுலை பாராட்டுகிறேன். 


ஆனால் நேரு காலத்திலேயே இப்படி காப்பியடிக்க முயன்றது காங்கிரஸ். ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு போல காங்கிரஸும் முழுநேர ஊழியர்களைக் கொண்டுவரவும், தினசரி ஷாகா நடத்தவும் முடிவெடுத்தனர். ஆனால் ஓரிரு நாட்கள் கூட அவர்களால் ஷாகா நடத்த முடியவில்லை. 
ஒரு கட்சி அல்லது அமைப்பை வளர்க்க தீவிரமான சுயபரிசோதனை முக்கியம். அதை விட்டு, காப்பியடித்தால் இப்படித்தான் ஃபெயிலாக போகும். காங்கிரஸ் ஏற்கனவே முயற்சித்து தோற்ற விஷயம்தான் இது. அவங்க இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாங்க. 
ஆனால் ஒண்ணு, காங்கிரஸோட இந்த முடிவு, ஆர்.எஸ்.எஸ். பேரியக்கம் சரியான பாதையில் செல்கிறது அப்படிங்கிறதை தெளிவாக காட்டுது.” என்கிறார் பெருமையாக. 
இருக்காதா பின்னே?!