தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு தொகுதிக்கு ஒன்றரை ஆண்டுகளில் மூன்று தேர்தல் மூன்று வேட்பாளர்களை பார்த்த தொகுதி என்றால் அது ஆர்.கே.நகர் தொகுதியாக தான் இருக்கும்.
2011 ஆ ஆண்டு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அதிமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சென்னையில் பெரும்பாலான இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. சென்னையின் கோட்டையாக விளங்கிய ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிவேல் வென்றார்.

பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் 2014 ல் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். இதனல் முதல்வராக ஓபிஎஸ் பதவி ஏற்றார். அதன் பின்னர் வழக்கில் வென்ற ஜெயலலிதா ஆர்.கே. நகரில் நின்றார். தற்போது அவரது மரணத்தால் மூன்றாவது நபர் நிற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. மற்றும் முதல்வர் பதவி பறிபோனது.
பெங்களூரு உயர்நீதிமன்றம் 2015, மே 11ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயலலிதா அதே மாதம், 23ஆம் தேதி தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றார்.

ஜெயலலிதா எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதற்காக சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. ஆக இருந்த வெற்றிவேல் 2015, மே மாதம் 17ஆம் தேதியே ராஜினாமா செய்தார். அதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் மறு மாதமான ஜுன் 27ஆம் தேதியே இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர், 2016ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானார்.
இந்நிலையில், ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 5ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார். இதனால் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தல் வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி காலியானதை தொடர்ந்து அடுத்த 2017ஆம் ஆண்டு, மே மாதம் இறுதிக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
அதன்படி பார்த்தால், 18 மாதங்களில், அதாவது ஒன்றரை வருடத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும் மூன்று முறை தேர்தல் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நட்சத்திர அந்தஸ்து பெற்றுவிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் யார் போட்டியிடுவார் என்ற பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சசிகலா போட்டியிடலாம் என்றும் இல்லையில்லை திவாகரன் அதிமுக சார்பில் நிறுத்தப்படுகிறார் என்றும் பேசப்படுகிறது. அதே நேரம் மக்கள் விரும்பினால் தாம் அரசியலில் குதிப்பேன் என ஜெயலலிட்தாவின் அண்ணன் மகல் தீபா தெரிவித்துள்ளார். இதனால் ஆர்.கே . நகரில் தீபா போட்டியிடவும் வாய்ப்புண்டு என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
