ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.கே. நகரில் மிகப் பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரனின் வாக்குகளும் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளும் என்ன ஆனது என்ற பெரும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இரண்டு முறை வென்ற தொகுதி ஆர்.கே. நகர். 2015 இடைத்தேர்தலிலும் 2016 பொதுத் தேர்தலிலும் ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்றார். சென்னை திமுக கோட்டையாக கருதப்பட்டாலும்கூட, ஆர்.கே. நகர் தொகுதி மட்டும் எப்போதும் அதிமுகவின் கோட்டையாக இருந்திருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017 டிசம்பரில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 
இந்தத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி தினகரன் 89, 013 வாக்குகள் பெற்று அதிமுகவை 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமாகத் தோற்கடித்தார். அதிமுகவோ 48,306 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்தது. திமுக இன்னும் மோசம் போனது. வெறும் 24, 651 வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை பறிகொடுத்து. இந்தத் தேர்தல் திமுகவுக்கு அவமானத்தைத் தேடி தந்தது. திமுக வழக்கமாக பெற்று வந்த வாக்குகள் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது.


ஆனால், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட ஆ.கே. நகரில் காட்சிகள் அப்படியே தலைகீழாக மாறியுள்ளன. டெபாசிட் இழந்த திமுக ஆர்.கே. நகர் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அசரடித்துள்ளது. அக்கட்சி 1,03,227 வாக்குகளை அள்ளியுள்ளது. ஆனால், 89 ஆயிரம் வாக்குகள் பெற்ற டிடிவி தினகரன் நடத்திவரும் அமமுக, 10,551 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இதேபோல அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக 21,920 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.


ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனும் சேர்ந்து 1,37, 439 வாக்குகளைப் பெற்றனர். ‘அதிமுக ஓட்டுகளை இருவரும் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால், திமுக ஓட்டுதான் கரைந்துவிட்டது; மு.க.ஸ்டாலினின் தலைமைக்குக் கிடைத்த பரிசு இது’ என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் திமுகவை கிண்டலடித்தன. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் ஆர். கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தன்னுடைய வாக்கு வங்கியை சுமார் 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், இந்தத் தொகுதியில் பாரம்பரியமாக அதிமுக பெற்றுவந்த வாக்குகள் எல்லாம் கரைந்து போயிருக்கிறது. அமமுகவும் அதிமுக கூட்டணி கட்சியும் சேர்ந்தே சுமார் 32,400 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இதன்மூலம் ஆர்.கே. நகரில் அதிமுக ஓட்டுகள் திமுகவுக்கு மாறிவிட்டதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.