தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். “முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் சிறப்பான நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது. மதுரையில் கொரோனா வேகமாகப் பரவி வந்த நிலையில், தற்போது மகிழ்ச்சி அடையும் வகையில் கொரோனா வைரஸ் குறைந்துவருகிறது. இன்னும் சில தினங்களில் ஒற்றை இலக்க அளவில் தொற்றை குறைக்க எல்லாவிதமான நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன. மதுரையில் தினமும் சுமார் 3,500 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இவர்களில் தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 3 சதவீதமாகக் குறைந்துள்ளது.


மக்கள் அனைவரும் அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும். நோய் தொற்றை முற்றிலும் ஒழிக்க ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்க மதுரையில் அம்மா கிச்சன் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடைசி நோயாளி வரும்வரை அம்மா கிச்சன் தொடர்ந்து செயல்படும். தமிழகத்தில் அதிமுக மட்டுமே மக்கள் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறது. திமுகவில் அதிகார பசியில் திரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தீனி கிடைக்காது. புரட்சி தலைவி அம்மாவின் பிள்ளைகள் எல்லோரும் ஒற்றமையுடன் இணைந்து அவருடைய லட்சிய கனவை நிறைவேற்றுவோம்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3-வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறும். மீண்டும் அதிமுகவே ஆட்சி அமைக்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது அதிகாரத்துக்கு வர துடிக்கிறார். அவருடைய பகல் கனவு பலிக்காது. திமுகவினர் செய்த அட்டகாசங்களையெல்லாம் மக்கள் மறந்துவிட வில்லை. எனவே, தமிழ்நாட்டில் இனி மேல் திமுக ஆட்சிக்கு வரவே முடியாது.” என்று உதயகுமார் தெரிவித்தார்.