அனைவரும் அண்ணன், தம்பியா பழகும் போது கடந்த கால கலவரங்களை திரைப்படமாக எடுப்பது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
கசப்புகளை மறந்து நாங்கள் அண்ணன், தம்பியாக பழகத் தொடங்கிவிட்ட நிலையில் 40 ஆண்டுகள் கழித்து இப்போது ஏன் கடந்த கால கலவரங்களை திரைப்படங்களாக எடுப்பது ஏன் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வரும் 6ம் தேதி முதல் தங்கள் கட்சி சார்பில் 'டாஸ்மாக் யுத்தம்' எனும் பெயரில் இரண்டாம் கட்ட மது ஒழிப்புப் போராட்டம் நடத்த உள்ளது குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "விஜய் எங்களுடன் சேர்ந்து அரசியலுக்கு வந்தால் நடிகர் விஜயை நாங்கள் ஆதரிப்போம். அதற்கு முன்பாக நடிகர் விஜய் தேர்தலில் பணம் வாங்கி கொண்டு வாக்களிக்க கூடாது என 5 ஆண்டுகள் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டும். தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுக்க கூடாது என்பது எங்கள் சித்தாந்தம். நடிகர் விஜய் தான் படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளையும், மது அருந்தும் காட்சிகளையும் வைத்துள்ளார். விஜய் எங்களோடு இணைந்து மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.
நான் திரைப்படங்களை பார்ப்பதில்லை. தேவர் மகன், கொம்பன் திரைப்படங்களை பார்க்காமல்தான் நான் கருத்து சொன்னேன். இன்று எடுக்கப்படும் பல திரைப்படங்கள் காலம் கடந்த படைப்புகளாகவே உள்ளன. நாங்கள் போராட்டம் நடத்திய காலகட்டத்தில் எங்களது போராட்டத்தை நியாயப்படுத்தி ஒரு திரைப்படம் கூட எடுக்கவில்லை. பல போராட்டங்களை சந்தித்தோம்.
உறவினர்கள் உதவியுடன் கணவனை கொலை செய்த பெண்; உடலை மறைத்தபோது சிக்கிய மனைவி
அண்ணன், தம்பியாக பழகுகின்றனர்
அப்போது மறைமுகமாக கூட எங்கள் போராட்டத்தின் நியாயத்தை எந்த திரைப்படமும் பேசவில்லை. சுந்தரலிங்கனார் பெயரை போக்குவரத்து கழகத்திற்கு வைத்தபோது அரசு பேருந்துகளில் சில சாதியினர் ஏறுவதற்கு மறுத்தனர். நாங்கள் வெட்டிக்கொண்டு, குத்திக் கொண்டு இருந்தபோது எங்களைப் பற்றி எந்த திரைப்படமும் எடுக்கவில்லை. ஆனால் அண்ணன் தம்பியாக பழக ஆரம்பித்தவுடன் இப்போது வந்து படம் எடுக்கின்றனர். 40 ஆண்டுகள் கழித்து இப்போது ஏன் படம் எடுக்க வேண்டும்.
தேவர்மகன் படத்தை எதிர்க்கவில்லை
நாங்கள் தேவர் மகன் படத்தை எதிர்க்கவில்லை, அதில் உள்ள ஒரு பாடலைத்தான் எதிர்த்தோம். பிற சமூக மக்கள் வாழும் இடங்களில் அந்த பாடலை ஒலிபரப்பினால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால்தான் அதனை எதிர்த்தேன். தேவர் மகன் பிரச்சினை முடிந்த பறகு சண்டியர் என படத்தின் பெயரை எழுதி அரிவாளுடன் ரத்தம் சொட்ட சொட்ட படங்களை வரைந்து வைத்தனர். எனவே அந்த ரத்தம் யாருடையது என்று கேட்டு அப்படத்தின் பெயரை மாற்ற சொன்னோம்.
தென்மாவட்ட அமைதிக்கு நாங்கள் தான் காரணம்
ஒரே சாதிக்குள்ளும் சண்டை நடக்க கூடாது என்பது எங்கள் கருத்து. கொடியன்குளத்தில் கிணற்று நீரில் பால்டாயிலை ஊற்றினர். நான் மேற்கொண்ட மது ஒழிப்பையும், இரட்டை குவளை ஒழிப்பு போராட்டங்களையும் ஏதேனும் ஒரு படத்தில் காட்டினார்களா..? தென்மாவட்டங்களில் எங்கள் போராட்டத்தால் இன்று அமைதி வந்துள்ளது. நாங்கள் அடித்து, நாங்கள் எழுந்து, அமைதியை நிலைநாட்டினோம். எந்த எழுத்தாளர்களும், படைப்பாளர்களும், அரசியல்வாதிகளும் எங்களுக்குள் அமைதியை ஏற்படுத்தவில்லை. எந்த அரசியல் தலைவரும் தேவர்களுக்கும், எங்களுக்குமான சண்டையை பேசி தீர்க்கவில்லை.
தேனியில் பரபரப்பு; விசாரணைக்கு சென்ற காவலரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல்
அரசியல் வளர்ச்சிக்கே திரைப்படம்
பேருந்து நிலையத்தில் பட்டியலின மக்கள் அமர கூட முடியாது, சில சாதியினர் வந்தால் எழுந்து நிற்க வேண்டும் உள்ளிட்ட நிலை இருந்தது. சிலரின் அரசியல் வளர்ச்சிக்கே இன்று திரைப்படங்கள் பயன்படுகிறது. யாரையும் பண்படுத்த பயன்படுவதில்லை. சில நல்ல படங்கள் வரும்போது அவற்றை பாராட்டலாம். பள்ளர் என்று கூறினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை ஒழிக்கவே தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்ற கூறினோம்.
புதிய தலைமைச் செயலாளர், டிஜிபி பதவிக்கு இருவரும் தங்களுக்கான முழு அதிகாரத்தையும் உணர்ந்து செயலாற்ற வேண்டும். கடைநிலை காவல்நிலைய அதிகாரிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் இடையே தொடர்புகள் மிகக் குறைவாக உள்ளன. பலவித மனித உரிமை மீறல், சட்ட விரோத செயல்கள் கடைநிலை காவல்துறை அதிகாரிகள் அல்லது கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட கடைநிலை வருவாய் துறை அதிகாரிகள் துணையுடனே நடக்கின்றன.
கனிம வளக் கொள்ளை, கள்ள மது விற்பனை, சட்ட விரோத பார்கள், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது . இவற்றை புதிய தலைமைச் செயலாளர், டிஜிபி கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோத பார்களால் டாஸ்மாக் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருவாய் முறையாக வரவில்லை, எனவே அவற்றை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் மற்றும் செந்தில்பாலாஜி மீது வழக்கு தொடுக்க ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.
செல்பி மோகத்தால் ரயிலில் அடிப்பட்டு உடல் சிதறி 2 இளைஞர்கள் பலி
செந்தில்பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். அவை டாஸ்மாக் தொடர்பாக நாங்கள் கொடுத்துள்ள வழக்குகள்தான். தமிழகத்தில் சட்ட விரோத பார்கள் மூலம் ஒரு ஆண்டில் 1 லட்சம் கோடியளவிற்கு ஊழல் நடந்துள்ளது. அதுகுறித்து மத்திய அரசு வலிமையான விசாரணைக் கமிசன் அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்சா, அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறையை ஜூலை 20 முதல் 25 ம் தேதிக்குள் சந்தித்து மனு அளிக்க உள்ளேன். அரசுக்கான ஆயத் தீர்வையை செலுத்தாமல் இந்த பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
புதிய தமிழகம் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் விரிவடையும். தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை தொடங்கிவிட்டோம். பொதுத்தொகுதியில் நான் போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீங்கள் சொல்வதைப் போல் தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்துக் கூட நான் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.