Asianet News Tamil

ஒன்றிய கூப்பாட்டை நிப்பாட்டுங்க.. மோடி அரசோடு இணைந்து இதையெல்லாம் செய்யுங்க.. கிருஷ்ணசாமி அதிரடி.!

ஒன்றிய கூப்பாட்டை விட்டுவிட்டு, மத்திய அரசோடு இணங்கி நின்று கொரோனாவல் உயிரிழந்த குடும்பத்துக்கு குறைந்தது தலா ரூ 25 லட்சமாவது  நிவாரணம் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புதிய தமிழகம் நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 
 

Put down the union cry .. Give relief to the corona deaths .. Krishnasamy's demand.!
Author
Chennai, First Published Jul 3, 2021, 9:29 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இதுதொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க உரிய வழிமுறைகளை காண தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு ஜீன் 30ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் ஒன்று கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் முறையாக இறப்புச் சான்றிதழ் வழங்குவது; இரண்டாவது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது. இந்த இரண்டு கோரிக்கைகளையும் புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதை அனைவரும் அறிவோம். கொரோனா பெருந்தொற்று தேசிய பேரிடருக்கு இணையானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
இப்பெருந்தொற்று நோயால் அனைத்து தரப்பினரும் ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தோர் பலர்; சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து கடன்பட்டோர் பலர்; தொழில்கள் முடங்கி பொருளாதாரப் பின்னடைவுக்கு ஆளானோர் கோடிக்கணக்கானோர். இதில் உயிரிழந்தவர்களின் வருமானத்தை மட்டுமே நம்பி பல குடும்பங்கள் இயங்கி வந்துள்ளன. ஆணுக்கோ பெண்ணுக்கோ திடீரென்று ஏற்பட்ட இந்த உயிரிழப்புகளாலும், கொரோனா பாதிப்பால் குடும்பங்களுக்கு ஏற்பட்ட கடன் தொல்லைகளாலும் குடும்பங்கள் அனைத்தும் நிலை குலைந்து போயுள்ளன. இதை தொடர்ந்து, அண்மைகாலமாக சமூகத்தில் தற்கொலைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே, கரோனாவால் உயிழப்புக்கு ஆளான அனைத்து குடும்பங்களுக்கும் மறுவாழ்வு கொடுக்க வேண்டியது  மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.         
கொரோனா என்பது வேறுவகையான இயற்கை பேரிடர்களைப் போல் அல்லாமல்,  இது ஒரு தொடர் நிகழ்வாக இருக்கிற காரணத்தினால், அதைத் தடுப்பதற்கு அரசுகள் பெரிய அளவிற்குக் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் லட்சக்கணக்கில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஒரு தேசம் கண்டுகொள்ளாமல் எளிதாக கடந்து செல்ல கூடாது. இப்போது தேசிய, மாநில அளவில் கொடுக்கப்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை சரியானதல்ல. நிச்சயமாக இதைவிட பன்மடங்கு கூடுதலாகவே இருக்கும். அரசு மருத்துவமனைகளிலேயே பல்வேறு சொற்ப காரணங்களைக் கூறி கொரோனா மரணச் சான்றிதழ்கள் மறுக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான கிராமங்களில் சிகிச்சை பெற இயலாமல் தங்களுடைய இல்லங்களிலேயே கொத்து கொத்தாக மடிந்து போனவர்களின் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படவே இல்லை. கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் ஆற்றில் மிதந்ததையும், நதிக் கரையோரங்களில் புதைக்கப்பட்டதையும் நாம் அறிவோம். அதேபோல, தமிழகத்தில் மருத்துவமனை பிரேதக் கிடங்குகளில் வாரக் கணக்கிலும், மின் மயானங்களில் நாள் கணக்கிலும் காத்துக் கிடந்ததை எளிதாக மறந்து விட முடியுமா? கடந்த இரண்டாண்டுக் காலமாக கொரோனா மரணங்களுக்கு எங்குமே பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. பத்து அல்லது ஐந்தில் ஒரு மரணத்திற்கு மட்டும் இறப்புச் சான்றிதழ் அளித்து விட்டு, மீதமுள்ளவர்களுக்குச் சான்றிதழ் மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் மட்டுமல்ல, அடிப்படை அரசியல் சாசன உரிமையையும் மறுப்பதாகும். எல்லா நிகழ்வுகளுக்கும், மத்திய அரசு மீது மட்டும் பழி போட்டுத் தப்பித்துக் கொள்ள மாநில அரசு எண்ணாமல், கடந்து இரண்டு ஆண்டுகளாக  தமிழகத்தில் நடந்த மரணங்களில் விதிவிலக்காக ஒன்றிரண்டைத் தவிர, அனைத்து மரணங்களையும் கரோனா மரணங்களாகவே  கருதி சிறிதும் காலம் தாழ்த்தாமல்  உரியவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிட மீண்டும் வலியுறுத்துகிறேன்.
ஏனெனில், அரசின் எல்லாவிதமான உதவிகளைப் பெறுவதற்கும், இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிவாரணங்களைப் பெறுவதற்கும், குடும்பங்களில் சொத்து பங்கீடுகள் மற்றும் இதர பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இறப்பு சான்றிதழ் மிக மிக அவசியமானதாகும். அதே போன்று கொரோனா மரணம் எய்திய குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்க உரிய வழிமுறைகளைக் காண தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும், தமிழக அரசுக்கும் பொருந்தும். மக்கள்   கடந்த இரண்டு மாத ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக சொல்லொணா துயரத்திற்கும், கடும் கோபத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள்.  தங்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர் கொரோனாவால் உயிரிழந்தார் என நன்கு தெரிந்தும் இறப்பு சான்றிதழ் மற்றும் உரிய நிவாரணம் கிடைக்காத பட்சத்தில் மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
கடந்த ஒன்றரை வருடத்தில் நிகழ்ந்த எந்த கொரோனா மரணமும் விடுபடாமல் இறப்புச் சான்றிதழ் வழங்கிடவும், மரணமெய்திய குடும்பங்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கவும், கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பே, உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பைக் கொடுத்த பின்னரும், மாநில அரசு இது குறித்து கண்டும் காணாமலும், வாய்திறக்காமலும் இருப்பது இந்த உத்தரவை அப்படியே கடந்து செல்ல நினைப்பதாகவே தோன்றுகிறது.
”கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும்” என்று ஸ்டாலின் கடந்த ஆண்டு முன் வைத்த  கோரிக்கையை அவர் மறைக்கவும், மறக்கவும் நினைத்தாலும் அதை மக்கள் மறக்க மாட்டார்கள். எனவே, அதை மனதில் கொண்டு ஒன்றிய கூப்பாட்டை விட்டு விட்டு, மத்திய அரசோடு இணங்கி நின்று மாநில அரசும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, கரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இறப்புச் சான்றிதழ் கிடைத்திடவும், அவர்களின் குடும்பத்திற்கு குறைந்தது தலா ரூ 25 லட்சமாவது  நிவாரணம் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios