புதுக்கோட்டையில் நடைபெற்ற டி.டி.வி தினகரன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு மட்டும் தலைக்கு ரூ.300 கொடுக்கப்பட்டுள்ளது. தினகரன் மாவட்டம் தோறும் பொதுக்கூட்டம் நடத்தி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கும் ஒவ்வொரு முறையில் ஆள் சேர்ப்பது தினகரன் கட்சியினருக்கு வாடிக்கையாகிவிட்டது. எப்படி ஆள் சேர்த்தாலும் பத்திரிகைகள் மோப்பம் பிடித்து விடுவதால் பல்வேறு நூதன வழிகளில் அவர்கள் ஆள் சேர்க்க ஆரம்பித்துள்ளனர்.

 

மன்னார்குடியில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த பெண்களுக்கு டோக்கன் கொடுத்து பின்னர் ஒவ்வொருவருக்கும் எவர்சில்வர் பாத்திரங்களை கொடுத்து அனுப்பினர் தினகரன் கட்சியினர். வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு எவ்வளவோ முயன்றும் ஆள் சேராத நிலையில், அங்கு தங்கி பணியாற்றி வரும் வெளிமாநில இளைஞர்களை அழைத்து வந்திருந்தனர்.  இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் அடுத்த முறை கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் போது கவனம் தேவை என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற தினகரன் கூட்டத்திற்கும் வழக்கம் போல் கூட்டம் கூடியிருந்தது. ஆனால் வேலூர், மன்னார்குடியில் கூடிய கூட்டம் புதுக்கோட்டையில் இல்லை. சுமார் 25 ஆயிரம் பேர் அங்கு திரண்டிருந்தனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் திருச்சி, சிவகங்கை மற்றும் தஞ்சையை சேர்ந்தவர்கள். கரூரில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் புதுக்கோட்டைக்கு வந்திருந்தன. புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் என்று மட்டும் கணக்கிட்டால் சுமார் 10 ஆயிரம் பேர் கூட வந்திருக்கமாட்டார்கள் என்கிறார்கள். 

அதே சமயம் புதுக்கோட்டையில் இருந்து பெண்களை கணிசமான அளவில் அழைத்து வந்திருந்தார்கள். அவர்களுக்கு தலைக்கு தலா 300 ரூபாய் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் லோக்கலில் இருந்து வந்த ஆண்களுக்கு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதே சமயம் புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தேவையான வேன்களை எடுத்துக் கொள்ள தினகரன் அனுமதி அளித்திருந்தார்.

 

அந்த வேனுக்கான போக்குவரத்து செலவை மட்டுமே தினகரன் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மற்றபடி கூட்டத்திற்கு வந்து சென்றவர்களுக்கான உணவு மற்றும் சரக்கு செலவை மாவட்டச் செயலாளர்கள் பார்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் இருந்து வழக்கம் போல் செந்தில்பாலாஜி ஒரு கூட்டத்தை கூட்டி வந்திருந்தார். சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வேன்களை வைத்து கட்சி நிர்வாகிகள் கணிசமான அளவில் ஆட்களை அழைத்து வந்திருந்தனர். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது தினகரன் என்ன தான் பிளான் செய்து கூட்டத்தை கூட்டினாலும் அவர் கூட்டத்தை எப்படி கூட்டுகிறார் என்கிற ரகசியம் வெளியாகிக் கொண்டே தான் இருக்கிறது.