காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் 9ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் சேர்த்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்பதில் தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உறுதியாக இருக்கின்றனர். அதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வலுத்துள்ளன.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், புதுச்சேரி அரசு சார்பிலும், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது.