Puducherry Chief Minister Narayanasamy advised Vaanathi Srinivasan

புதுச்சேரி அரசியல் கலாச்சாரத்தை, தமிழக அரசியல் கலாச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள் என்று தமிழக பாஜக பொது செயலாளர் வானதி சீனிவாசனுக்கு புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் சீடர் நிவேதிதையின் 150-வது பிறந்த தின ரதயாத்திரை நேற்று புதுச்சேரிக்கு வந்தடைந்தது. புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில், ரதயாத்திரையை வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, என்.ஆர். காங்கிரசைச் சேர்ந்த எம்.பி.க்கள், கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், தமிழக பாஜக பொது செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய வானதி சீனிவாசன், அயர்லாந்தில் வளர்ந்த ஒரு பெண்மணி சகோதரி நிவேதிதை, இந்திய நாடடின் பெருமைகளை உயர்வை பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்தால் ஈர்க்கப்பட்டு இந்தியாவுக்கு வந்து தனது வாழ்நாளின் மீதி நாளை முழுவதுமாக நம் நாட்டிற்காக அர்ப்பணித்தார்.

மகாகவி பாரதியாரை, சேலம் கூட்டத்தில் சந்தித்த சகோதரி நிவேதிரை, சில மணித்துளிகள்தான் சந்தித்தார். காங். கட்சி தொண்டராக இருந்த பாரதியை மகாகவி ஆக்கிய பெருமை சகோதரி நிவேதிதைக்குத்தான் என்றார்.

மேலும் பேசிய வானதி சீனிவாசன், புதுவை மாநிலத்தில் நாம் ஓர் அருமையான காட்சியை பார்க்கிறோம். மாநிலத்தில் முதலமைச்சர், உயர் கல்வித்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என அனைவரும் இங்கே அமர்ந்துள்ளார்கள். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், அனைவரும் வேறு வேறு கட்சியில் இருந்தாலும், சகோதரி நிவேதிதைக்காக இங்கே ஒன்றிணைந்து இருக்கிறார்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்காக கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய முடியுமா? என்று கேட்கிறார்கள். இந்த மேடையில் அது நடந்து கொண்டிருக்கிறது என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி பேசும்போது, சகோதரி வானதி சீனிவாசனுக்கு, புதுச்சேரி மாநிலத்தின் அரசியல் கலாச்சாரம், டெல்லி அரசியல் கலாச்சாரத்தைப் போன்றது. அதனால், தமிழக அரசியல் கலாச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். எங்கள் மாநிலத்தில் அரசியல் தலைவர்களின் நிகழ்ச்சிக்கு அரசியல் பார்க்காமல் நாங்கள் கலந்து கொள்வோம். மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்டுச் செயல்படுபவர்கள் நாங்கள். கட்சி வேறு; மக்கள் பணி வேறு என்று கூறினார்.