தங்கத்தாரகையே! எங்கள் குடும்ப தலைவியே! உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஒரே ஒப்பற்ற தலைவியே! அரசியல் நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டு வென்ற நாயகியே!  நீங்கள் பிடித்து வைத்தால் நாங்களெல்லாம் பிள்ளையார், இல்லையென்றால் வெறு சாணிதான் அம்மா! எங்கள் அம்மா!’ 

அ.தி.மு.க.வில் இன்று கோலோச்சி சொத்துக்கள் சேர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கும், நேற்று கோலோச்சிய வகையில் சொத்து சேர்த்துக் கொட்டிய தலைகள், ஜெயலலிதா அமர்ந்திருக்கும் மேடையில் நின்று இப்படித்தான் கதறுவார்கள், கண்ணீர் விடுவார்கள். ஜெ., அந்த மேடையில் இல்லாவிட்டாலும் கூட, உளவுத்துறை வழியே அவர் காதுகளுக்கு போகும் என்று தெருமுனை பிரசாரத்திலும் கூட இப்படித்தான் பேசுவார்கள். 

ஜெயலலிதா இருந்தபோது அவரது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன்னதாகவே களைகட்டிவிடும் தமிழகம். பால்குடங்களென்ன, காவடிகளென்ன, அங்கப்பிரதடணங்களென்ன, அலகு குத்தல்களென, அர்ச்சனைகளென்ன....எப்படியாவது ஜெயலலிதாவின் கண்ணில் விழுந்து பதவி பெற பலரும், பெற்றிருக்கும் பதவியை தக்க வைக்க பலருமாக உருண்டு புரள்வார்கள். 
அப்போது அவர்களை பார்த்து எதிர்க்கட்சியினர் ‘நடிக்கின்றனர். அந்தம்மாவை ஏமாற்றுகின்றனர்’ என்று விமர்சித்தனர். ஆனால் அந்த விமர்சனத்தை ஜெ., நம்பவில்லை. ஆனால் இன்று அது உண்மை என்பதை உணர்ந்து, கண்ணீர் வடிக்கிறது ஜெயலலிதாவின் ஆன்மா! என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இதை விளக்கும் அவர்கள் “இன்று சோஷியல் மீடியாவில் சில அரசியல் விமர்சகர்களும், பத்திரிக்கையாளர்களும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளனர். அதாவது ஜெயலலிதாவால் வாழ்க்கைப் பெற்ற அ.தி.மு.க.வின் முக்கியஸ்தர்கள் பலர், அவரது பிறந்தநாளான இன்று கூட அவரது போட்டோவை தங்களின் சோஷியல் மீடியா பகுதியின் முகப்பில் வைக்கவில்லை! என்று. அப்படியானால் இவர்களின் நன்றி உணர்வு இவ்வளவுதானா? ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள்தானே! யாருக்குப் பயந்து இப்படி தங்கள் ‘அம்மா’வின் போட்டோவை முகப்பில் வைக்காமல் இருக்கிறார்கள்? 
இதுதான் அரசியல்! இதைப் புரியாமல் ஜெ., இவர்களை பத்து பதினைந்து பரம்பரைக்கு சொத்து சேர்க்க வைத்துவிட்டார்.” என்று. பாவம்தான் ஜெயலலிதா!