Asianet News Tamil

ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி கொடுத்து ஏன் வீணடிக்கிறீங்க? எடப்பாடியாருக்கு கிருஷ்ணசாமி அதிரடி கேள்வி!

ஓட்டுகளை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தமிழக அரசு தமிழகமெங்கும் அனைத்து ஜமாத்துகளுக்கும் 5,480 மெட்ரிக் டன் அரிசி ரம்ஜான் நோம்பு கஞ்சிக்காக வழங்குவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த அரிசியை உற்பத்தி செய்த ஏழை, எளிய விவசாயிகள் பசியோடும் பட்டினியோடும் இருக்கும்போது, அவர்களுக்கு இந்த 5,480 மெட்ரிக் டன் அரிசியை பகிர்ந்து அளித்திருக்கலாமே! 

PT President Krishnasamy ask question on Ramzan free rice
Author
Chennai, First Published Apr 28, 2020, 8:19 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

மக்களுக்கு எதுவுமே இல்லாதபோது ரம்ஜான் நோம்பு கஞ்சிக்கு 5,480 மெட்ரிக் டன் அரிசியை ஏன் வீணடிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக கிருஷ்ணசாமி வெளியுட்டுள்ள அறிக்கையில், “ஒன்றரை மாத காலமாக கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட பிறப்பிக்கப்பட்ட நடவடிக்கைகளால் இந்தியாவே முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. தொழில்களை முடக்கிய போதும்; போக்குவரத்தை முடக்கிய போதும்; வருமானத்தை இழந்தபோதும் தனது உயிரே பிரதானம் என்ற அடிப்படையில் மக்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க தயாரானார்கள். ஆனால், உணவு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அதிகபட்சம் 24 மணி நேரம் கூட முடக்கி வைப்பது முடியாமல் போயிருக்கும்.
ஒன்றரை மாத கால அவகாசத்தில் எல்லா குடும்பங்களும் மூன்று வேளையும் சரியான உணவை உட்கொண்டார்களா என்று சொல்ல முடியாது. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க விதவிதமான பழங்கள், காய்கறிகள், சூப்புகள், முட்டை மற்றும் மாமிச உணவு வகைகள், உலர்ந்த பழ வகைகள், நட்ஸ்கள் சாப்பிட வேண்டும் என்று நடிகர், நடிகைகளை வைத்துகூட விளம்பரம் செய்யப்பட்டது. இந்த அசாதரணமான சூழலில் இவையெல்லாம் எத்தனை குடும்பங்கள் கண்ணிலே பார்த்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. மூன்று வேளையும் தரமான அரிசி சாதம், சராசரியாக தன்னுடைய எடைக்கு ஒரு கிராம் என்ற அளவிலான பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொண்டார்களா? உடல் உறுப்புகளை சரியாகப் பராமரிக்க குறைந்தபட்ச வைட்டமின்கள் மற்றும் நுண் சத்துக்களை உள்ளடக்கிய காய்கறிகள் எத்தனை குடும்பங்களுக்கு கிடைத்திருக்கும்?
சுதந்திரம் பெற்று 73 வருடங்கள் கழித்த பிறகும், 60 சதவிகித மக்கள் ஒரு வார ஊரடங்கை கூட தாங்க முடியாத சக்தியற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனை தரக்கூடிய துயரம்! உடலுழைப்பில் ஈடுபடக் கூடிய ஒரு ஆண்மகனுக்கு அல்லது பெண்ணுக்கு தேவைப்படும் 2500 கலோரியிலிருந்து 3500 கலோரி வரையிலும் தேவைப்படும் உணவுகள் என்னென்ன? என்பதை என்றாவது ஒரு நாள் கூட ஆய்வுக்குட்படுத்தியது உண்டா? “உழவன் சேற்றில் கை வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்” என்று மேடைப் பேச்சுகளும், திரையிலே வீரவசனங்களும், பாடல்களும் இடம் பெறாத நாளில்லை. ஆனால், இந்த சொல்லுக்கும் செயலுக்கும் எவ்வளவு இடைவெளி என்பதை வசன கர்த்தாக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டே தீர வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாத தேசங்களில் தான் புரட்சி வெடித்து இருக்கிருக்கின்றன.
ஒன்றரை மாத காலமாக எந்தவிதமான வேலையும் இல்லை, வருமானமும் இல்லை. மத்திய, மாநில அரசு ஊழியராக இருந்து மாத சம்பளம் பெறக்கூடியவர்களால் இன்னும் சில நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியம். ஆனால் கணவனும், மனைவியும் மண்வெட்டியோ அல்லது கொத்தியோ எடுத்துச் சென்று நாளெல்லாம் உழைத்துக் கொண்டு வரும் சம்பளத்தில்தான் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த எந்தவிதமான பின்பலமும் அற்ற கோடான கோடி விவசாய தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் மற்றும் சிறுசிறு நிறுவனங்களில் பணிபுரிய கூடியவர்களால் எப்படி சமாளிக்க இயலும். அரசு இன்றாவது யார் ஏழை? யார் பணக்காரர்? யாரெல்லாம் இந்த சூழலை சமாளிக்க முடியும்? என்பதை கண்டறிந்து நிர்கதி அற்றவர்களுக்கு அதிகமான உதவிகளை அளித்து இருக்கக்கூடாதா?


“EQUITY AND EQUALITY” என்பது சமூகத்தில் ஏழையையும் பணக்காரரையும் ஒரே பார்வையில் பார்ப்பது அல்ல ! ஏழையை பணக்காரன் அளவில் உயர்த்தி பார்ப்பது தான். இன்னும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு எவ்வளவு நாள் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. மக்கள் அச்சத்தின் காரணமாக விவசாய பணிகளுக்கு கூட செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். எனவே, உடனடியாக பணியை துவங்கி தேவைக்கு ஏற்ற உணவை உற்பத்தி செய்ய முடியும் என்றும் சொல்ல முடியாது. எனவே, நம்மிடத்தில் இருக்கக் கூடிய உணவு தானியங்களை கையிருப்பு வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். ஏனெனில், உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வருமேயானால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் சூழல் உருவாகிவிடும்.
அரசு என்று வருகிறபோது அது சமயம், சாதி சார்ந்ததாக இருக்கக் கூடாது. இந்தியா இந்துக்கள் பெரும்பாலும் வாழக்கூடிய நாடு. தேசிய அளவில் தீபாவளி, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மஹா சிவராத்திரி பொங்கல் போன்ற பல பெரிய பண்டிகைகளும், அந்தந்த மாநில அளவிலும், வட்டார அளவிலும் தைப்பொங்கல், ஆடி அமாவாசைகள், ஐயப்பன் வழிபாடு, சித்திரை திருவிழா, தைப்பூசம், மாசி மகம் மற்றும் குலதெய்வ வழிபாடு, தேரோட்டங்கள் என எத்தனையோ பண்டிகைகளும் உண்டு. மேற்குறிப்பிட்ட நாட்களில் இந்து மக்கள் பல நாட்கள் விரதங்கள் மேற்கொண்டு இஷ்ட தெய்வங்களை வணங்கி வருகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளும், 40 நாட்கள் விரதம் மேற்கொண்டு அனுசரித்து வரும் புனித வெள்ளியும் பிரசித்தி பெற்றவைகளாகும். அதேபோல சீக்கிய மதத்தினர், சைவ மதத்தினர், புத்த மதத்தினர் என ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களுக்கு விசேஷமான நாட்களும், பண்டிகைகளும் உண்டு. அதேபோல இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் மற்றும் பக்ரீத் ஆகிய விழாக்கள் முக்கியமானவைகள்.


கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் இப்பொழுது முடக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். வெளிநாட்டுக்கு சென்று வந்த இந்தியர்கள், வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த வெளிநாட்டவர்கள், அவர்களோடு நெருங்கி தொடர்பு கொண்டவர்கள் என பெரிய அளவிற்கு கொரோனா பரவியுள்ளது. தமிழக முதல்வர் அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இது பணக்காரர்களால் கொண்டுவரப்பட்ட நோய் என்று பகிரங்கமாகவே சொன்னார். ஆனால், இதில் எவ்விதத்திலும் சமந்தப்படாத ஏழை, எளிய மக்கள் படக்கூடிய இன்னல்கள், விவசாய தொழிலாளர்கள் வடிக்கும் கண்ணீர், இலட்சோப லட்சம் மக்களின் அவலங்கள் குறித்து தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன. 
ஒவ்வொரு பிடி அரிசியையும் சேமித்து வைத்து அதை பசியோடும், பட்டினியோடும் இருக்கக்கூடிய ஏழைகளுக்கு மட்டுமே கொண்டுபோய் சேர்க்க வேண்டிய இந்த நேரத்தில் வேண்டாம் வேண்டாம் என்று தீர்மானம் போடக்கூடிய இடத்தில் ரம்ஜான் நோம்பு கஞ்சிக்கு என்று 5,480 மெட்ரிக் டன் அரிசியை ஏன் வீணடிக்க வேண்டும்? அப்படியே கொடுக்க வேண்டும் என்றாலும் கூட அந்த ஜமாத்தில் உள்ள ஏழைகளுக்கு மட்டும் கொடுப்பது தானே சரியானதாக இருக்க முடியும், ஆனால் அதைவிடுத்து இதுபோன்ற முக்கியமான காலகட்டத்தில் 5,480 மெட்ரிக் டன் அரிசியை வீணடிப்பது என்பது மிகப் பெரிய தவறான முன்னுதாரணம்.
ஓட்டுகளை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தமிழக அரசு தமிழகமெங்கும் அனைத்து ஜமாத்துகளுக்கும் 5,480 மெட்ரிக் டன் அரிசி ரம்ஜான் நோம்பு கஞ்சிக்காக வழங்குவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த அரிசியை உற்பத்தி செய்த ஏழை, எளிய விவசாயிகள் பசியோடும் பட்டினியோடும் இருக்கும்போது, அவர்களுக்கு இந்த 5,480 மெட்ரிக் டன் அரிசியை பகிர்ந்து அளித்திருக்கலாமே! இதையெல்லாம் கணக்கிலே கொள்ளாமல் இந்த அரசு செயல்படுவது முறையாகாது. வருங்காலத்தில் இந்து மதத்தினர், கிறித்துவ மதத்தினர், புத்த மதத்தினர், ஜைன மதத்தினர், சீக்கிய மதத்தினரும் இதேபோல் தங்களுடைய விழாக்களுக்கும் அரிசி கேட்டு வீதிக்கு வந்து போராடவோ அல்லது நீதிமன்றம் செல்லக் கூடிய நிலைமையோ ஏற்படும். அது மட்டுமல்ல உழைத்துவிட்டு ஓடாய் தேயக்கூடிய உழைப்பாளி மக்கள் இதை உணரும்பட்சத்தில் பாரதிதாசன் சொன்னது போல ஒடப்பராய் இருப்பவர்கள் உதையப்பராகும் காலமும் வரலாம். எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.” என்று அறிக்கையில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios