தம்பிதுரையை தவிர அதிமுகவில் உள்ள அனைத்து எம்பிக்களும் ஓ.பன்னீர்செல்வத்திடம் வருவார்கள் என, எம்பி பி.ஆர்.சுந்தரம் கூறினார்.
அதிமுகவில் சசிகலா – ஓ.பி.எஸ். என இரண்டு அணிகள் பிரிந்துள்ளன. இதில், சசிகலா தரப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிர்வாகிகள் இடம் பெயர்ந்து, ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதைதொடர்ந்து நாமக்கல் எம்பி பி.ஆர்.சுந்தரம், இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு நேரில் சென்று, தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுக என்னும் இயக்கத்தை வழி நடத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே உள்ளது. சசிகலாவுடன் இருக்கும் தம்பிதுரையை தவிர, அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் ஓ.பன்னீர்செல்வத்திடம் வருவார்கள்.
முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது, 15 பேருடன் சசிகலா அங்கு வந்தார். மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை. அவர் இறந்தபோது, மருத்துவமனையில் இருந்த சசிகலா, சுடிதார் அணிந்து கொண்டு இருந்தார். அவரது கண்ணில் ஒரு சொட்டு கண்ணீரும் வரவில்லை.
உடல் வைத்திருந்த இடத்தில் எங்களது கண்ணில் நீர் வடிந்து கொண்டு இருந்தது. துக்கத்தை தாங்கமுடியாமல் தவித்தோம். அப்போது, அங்கிருந்த தம்பிதுரை, சீப்பு எடுத்து தலை சீவினார். ஜெயலலிதா உடல் வைத்தபோது, யாரும் அழவில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது அந்த மர்மம் விலக வேண்டும்.
சசிகலாவின் கணவர் நடராஜன், குடும்ப அரசியல் நடத்துவோம் என கூறுகிறோர். எங்கள் கட்சியை நடத்த அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. நடராஜனுக்கும், சசிகலாவுக்கும் யார் தலைமையில் திருமணம் நடந்தது. அவர்கள் துரோகியா அல்லது ஒ.பன்னீர்செல்வம் துரோகியா.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு சின்னமாக மாற்ற வேடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
