சென்னை அடையாறு சத்யா ஸ்டியோ அருகில் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள், எம்எல்ஏக்களுக்கு கருப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த கூவத்தூரில் 10 நாட்களாக சிறை வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள், சுமார் 95 பேர் வரை இன்று காலை, நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள கிளம்பினர். சுமார் 27 அமைச்சர்கள், தங்களது அரசு இன்னோவா காரில் சுமார் 5 எம்எல்ஏக்கள் வரை ஏற்றி கொண்டு பாதுகாப்புகாக புறப்பட்டனர்.

இதனிடையில் ஆங்காங்கே கருப்பு கொடி ஏந்தி, எதிர்ப்பு கிளம்பும் எதிர்ப்பார்க்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் போலீசார் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, பிரச்சனை வராமல் பார்த்து கொண்டனர்.

ஆனால், கிரீன்வேஸ் சாலை அருகே சத்யா ஸ்டுடியோ அருகில் பெண்கள் மற்றும் ஆண்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டு, எம்எல்ஏக்களுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அகற்ற முயன்றனர். அதுமுடியாமல் போனதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் ஜெயலலிதா இருக்கும்போது, எந்நேரமும் அவரது வீடு அல்லது கட்சி அலுவலகம் முன்பு கூடி இருந்தவர்கள். அதிமுகவின் நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டு, அடிக்கடி தொலைக்காட்சிகளில் முகம் காட்டும் பெண்கள் பலர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, பெரிய போராட்டத்துக்கு பிறகே, போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு நிலவி வந்த பதற்றம் ஓய்ந்தது.