சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பல தரப்பினரும் போராடிவருகின்றனர். காவிரிக்காக தமிழர்கள் போராட்ட களத்தில் ஒன்றிணைந்துள்ள இந்த நேரத்தில், ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற குரல்கள் வலுத்தன.

ஆனால் திட்டமிட்டபடியே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி போட்டி நடைபெற உள்ளது. அதற்காக சேப்பாக்கம் மைதானத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மைதானத்தை நோக்கி பேரணியாக சென்றனர். ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து மைதானத்தை நோக்கி பேரணியாக சென்றவர்கள், கலைவாணர் அரங்கத்தின் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் சாலை அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல, சென்னை அண்ணா சாலையில், கையில் கறுப்பு நிற பலூனுடன் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனால் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.