காவிரி மேலாண்மை வாரியத்திற்கு ஆதரவாக தமிழர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஐபிஎல் கொண்டாட்டம் கூடாது என அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் உட்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதையும் மீறி சென்னையில் போட்டி நடத்தப்படுவதால், மாலை 4 மணி முதலே அண்ணா சாலை மற்றும் சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்லும் வழிகளிலும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

முன்னெச்சரிக்கையாக சேப்பாக்கம் மைதானத்திலும் மைதானத்திற்கு செல்லும் வழியிலும் சுமார் 4000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் மைதானத்தை நோக்கி பேரணியாக சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.

மிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து, சீமான், வெற்றிமாறன், கௌதமன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அண்ணா சாலையே ஸ்தம்பித்தது.

சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் சென்னையின் முக்கிய பகுதியே ஸ்தம்பித்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் தமிழர் என்ற ஒற்றை அடையாளத்துடன் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தை கட்டுப்பட்டுத்த முடியாமல் போலீஸார் திணறினர். சென்னையில் போட்டியை நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியை ஐபிஎல் நிர்வாகம் நாடியது. அந்தளவிற்கு போராட்டம் வலுவாக அமைந்தது. 

வீரர்களை தடுக்கவோ எந்தவிதமான தொந்தரவோ கொடுக்காமல் போட்டி சென்னையில் நடத்துவதற்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், கௌதமன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தி இந்தியாவின் கவனத்தை தமிழகத்தின் பக்கம் திருப்பியதே போராட்டத்தின் வெற்றிதான். 

ஐபிஎல்க்கு எதிரான போராட்டத்தின் காரணமாக வழக்கத்திற்கு மாறாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீரர்கள் மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் வரும் வழியில் போராட்டக்காரர்களை கவனித்திருப்பார்கள். இன்றைய ஐபிஎல் போட்டியில் ஆடும் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஒரு தமிழர். அந்த அணியின் பயிற்சியாளர் ஜாக் காலீஸ் மற்றும் வீரர்கள் கிறிஸ் லின், சுனில் நரைன், ஆண்ட்ரூ ரசல் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவராவது அல்லது எல்லாரும் கூட தினேஷ் கார்த்திக்கிடம் சென்னையின் அசாதாரண சூழல் குறித்து கேட்டறிந்திருக்க கூடும்.

ஐபிஎல்லை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை விட, இதன்மூலம் தேசத்தின் காதுகளுக்கு தமிழகத்தின் உரிமைக்குரலை கேட்கவைக்க வேண்டும் என்பதே போராட்டத்தின் நோக்கம். அந்த வகையில், தேசத்தை கடந்து சர்வதேசத்திற்கே காவிரி விவகாரத்தை, ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் கொண்டு சேர்த்துள்ளது.