இந்தி திணிப்புக்கு ஆதரவாக இருந்த காரணத்தினால் தான் தேர்தலில் காமராஜர் தோல்வி அடைந்ததாக டி.டி.வி தினகரன் பேசியதால் நாடார் அமைப்புகள் கடும் கோபத்தில் இருக்கின்றன.

திருவண்ணாமலையில் எட்டு வழிசாலை திட்டத்திற்கு எதிரான ஆர்பாட்டத்தை முடித்துவிட்டு டி.டி.வி  தினகரன் சேலத்திற்கு சென்றார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், மக்களின் மன நிலைக்கு எதிராக செயல்படும் எந்த அரசும் நீடிக்க முடியாது என்று கூறினார். சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக மக்கள் இருப்பதாக டி.டி.வி தெரிவித்தார். இதனை உணர்ந்து தான் சேலத்தில் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி திடீரென பசுமை வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம் என்று பல்டி அடித்ததாக தினகரன் கூறினார்.

மேலும் மக்களின் மனநிலைக்கு எதிராக முடிவெடுத்து இந்தி திணிப்பை ஆதரித்த காரணத்தினால் தான் தேர்தலில் காமராஜரை மக்கள் தோற்கடித்ததாகவும் தினகரன் கூறியுள்ளார். காமராஜர் மிகப்பெரிய தலைவர். ஆனாலும் அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். இதற்கு காரணம் இந்தி திணிப்பை காமராஜர் ஆதரித்தது தான் என்கிற ரீதியில் டி.டி.வி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டி.டி.வி தினகரனின் இந்த பேச்சு காமராஜர் சார்ந்த நாடார் சமுதாயத்தை கோபப்படுத்தியுள்ளது.

வரலாற்றை அரைகுறையாக தெரிந்து கொண்டு தினகரன் பேசியுள்ளதாக நாடார் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். காமராஜர் ஒரு போதும் இந்தி திணிப்பை ஆதரித்து பேசியதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழர்கள் இந்தி கற்றுக் கொள்வது நல்லது என்று மட்டுமே காமராஜர் கூறியுள்ளார், அவர் ஒரு போதும் இந்தியை கட்டாயப்படுத்தவில்லை என்றும் நாடார் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளார். உண்மை இப்படி இருக்க, காமராஜர் ஏதோ இந்தியை கட்டாயப்படுத்தி தமிழர்களிடம் திணித்ததை போல் தினகரன் பேசியுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் போற்றப்படும் ஒரு தலைவர் குறித்து அரைவேக்காட்டுத்தனமாக தினகரன் பேசியுள்ளதை ஏற்க முடியாது என்று நாடார் அமைப்புகள் கூறியுள்ளன. உடனடியாக தனது பேச்சை  தினகரன் திரும்ப பெற்று தவறாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் நாடார் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.