உலக தமிழர்கள் எல்லோருடைய கண்களும் தூத்துக்குடியை நோக்கி திரும்பி நிற்கிறது. காரணம், ஸ்டெர்லைட் எனும் நாசகார ஆலைக்கு எதிரான போராட்ட களம் அதுதானே!
1996-ல் காப்பர் உற்பத்தியை துவங்கிய இந்த ஆலையின் வாசலில் போராட்டங்கள் நடப்பதும், பின் கலை(க்கப்படு)வதும் வாடிக்கை. காரணம் அவை அனைத்தும் ஏதாவது அரசியல் கட்சிகள், அமைப்புகள், லெட்டர்பேடு இயக்கங்களால் பல எதிர்பார்ப்புகளுடன் நடத்தப்படும். 

ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த ஆலைக்கு எதிரான போராட்டம் வெகு தீவிரமடைந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தன்னெழுச்சியாக தூத்துக்குடி மக்கள் லட்சக்கணக்கில் இங்கு குவிகிறார்கள். காரணம்? இந்த ஆலையின் வேதிக்கழிவுகளால் கேன்சர், தோல் பிரச்னைகள், மூச்சு திணறல், தண்ணீர் மாசு, காற்று மாசு ஆகியன ஏற்படுகின்றது எனும் முழக்கமே!

ஸ்டெர்லைட் ஆலையால் உண்மையிலேயே நாசகார விளைவுகள் நேருகிறதா? என்று கடந்த இருபத்து ரெண்டு வருடங்களாக இந்த ஆலை குறித்த ஆய்வில் ஈடுபட்டு வரும் சுற்றுப்புறவியல் துறையின் பேராசிரியரான அருணாச்சலம்...”தாதுக்களை உருக்கி தாமிரம் தயாரிக்கும் போது கரிய நிற புகை வெளி வருகிறது. அந்தப் புகை சல்பர் ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, அயன் ஆக்ஸைடு போன்ற திரவங்களின் குழுமமாக இருக்கிறது. இந்த அமிலங்கள் அத்தனையுமே நச்சுக் கிருமிகள்தான். இவரை ராஜ திராவகம் என்றே அழைக்கப்படுகிறது. 

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளிவரும் புகையில் கலந்திருக்கும் இந்த திரவமானது, காற்றில் கலந்து மேகத்தில் தங்கிவிடுகிறது. மழை பெய்யும்போது அமிலம் கலந்து பெய்கிறது. இந்த அமில மழையால் பூமி மலடாகிறது. விவசாயம் கெடுகிறது, மனிதர்கள் பல நோகளின் குடுவையாகி போகிறார்கள். 

வெறும் புகையால் மட்டுமே ஊரை கெடுக்கிறது இந்த ஆலை என்று நினைக்காதீர்கள். சல்பர் கழிவுகள் இந்த ஆலையில் திடக்கழிவுகளாக கொட்டி வைக்கப்படுகிறது. இவை ஆர்சனிக் மெட்டலாக மாறிவிடும். இதன் மேல் மழை தண்ணீர் பட்டு அது அப்படியே பூமியில் இறங்கும்போது அவையும் நச்சுக் கழிவுகளாகின்றன. இதனால்தான் ஆலையை சுற்றியுள்ள நிலத்தடி நீரானது குடிக்க முடியாத நிலையில் இருக்கிறது. 

சரி! காற்றி வெளியாகும் அந்த ராஜ திராவகங்களை ஆலைக்குள்ளேயே பிரித்து எடுத்துவிட முடியாதா? என்று கேட்கலாம். சல்பர் ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, மற்றும் அயன் ஆக்ஸைடுகளை தனியாக ஒரு பிளாண்ட் அமைத்து சல்பியூரிக் ஆசிட்டாக மாற்ற முடியும். அப்படி மாற்றினால் மாசு உருவாவது குறையும். 

ஆனால் இந்த பிளாண்ட் அமைக்க செலவு அதிகம். ஒரு ஆலை அமைப்பதற்கான செலவில் பாதி ஆகும். எனவே, இந்த பிளாண்டை அமைக்க ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மறுக்கிறது. கேட்டால் சல்பியூரிக் ஆசிட் பிளாண்ட் இருக்கிறது என்கிறார்கள். 

இந்த ஆலையால் தூத்துக்குடி மக்களுக்கு பெரும் கேடு நடக்கிறது என்பது நிதர்சனம். இவ்வளவையும் செய்துவிட்டு கோயில் கட்டி தருகிறோம், வீடு கட்டி தருகிறோம் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த ஆலை உடனடியாக அகற்றப்பட வேண்டிய ஒன்று.” என்று சொல்லியுள்ளார். 

இதையே போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கைக்கான ஆதாரமாக எடுத்து பரப்ப துவங்கியுள்ளனர். 

விஷ ஆலையின் முகத்திரையை மட்டும் அருணாசலம் கிழிக்கவில்லை, இன்னொரு புதிரையும் முன்னிலைப்படுத்தி இருக்கிறார். அதாவது இந்த ஆலைக்கு எதிராக துவக்க காலத்திலேயே சில முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தீவிரமாக போராடியபோது அவருக்கு அந்த ஸ்டெர்லைட் ஆலை குறித்து பல விபரங்களை திரட்டிக் கொடுத்தவர்தான் இந்த அருணாசலம். 

இப்போது அவர் “இந்த நாசகார ஆலைக்கு எதிரான போராட்டங்களில் துவக்க காலத்தில் பல அரசியல் தலைவர்கள் ஆர்வமாக பங்கெடுத்தனர். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு பின்வாங்கிவிடுகிறார்கள். அது ஏன்? என்பதுதான் புரியவில்லை.” என்றிருக்கிறார். 
ஏன் பின்வாங்கினார்கள்? என்பதற்கான விடையை அவர்களின் மனசாட்சி உரக்க சொல்லிக் கொள்ளட்டும்.