பார்ப்பனர்களால் பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவும், பத்திரிகைகளில்  செய்தி வர வேண்டுமென்பதற்காவும்  சத்தம்போட்டுச் சிரிக்கத் தக்க நிறைய குட்டிக்கரணங்களை அடிக்கிறார் ரவிக்குமார் எம்.பி’ என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ். 

இது குறித்து நேற்று அவர் தனது முகநூல் பதிவில்,...பாருங்க சார் பாருங்க. அசந்தா நம்மளை வேத காலத்துக்கே கொண்டு போயிடுவாங்க போல இருக்கே..என்ற தலைப்பில் எழுதியுள்ள செய்தி இதோ,...திமுக எம்.பி ரவிகுமார் எப்படியானவர் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அவர் வி.சி.கவில் இருந்து கொண்டு தி.முக. எம்பியாக இருப்பதே போதும்.

ஆர்.எஸ்.எஸ் டாருண் விஜயின் நண்பரான இவர் நாடாளுமன்றத்துக்குச் சென்ற பின் முன்மொழியும் தீர்மானங்கள், சட்டத் திருத்தங்கள் எல்லாவற்றையும் பாருங்களேன். மிக மோசமாக அதிகாரக் குவியலை மோடி அரசு செய்து கொண்டிருக்கும்போது உப்புச் சப்பு இல்லாத அசட்டு விஷயங்களை எல்லாம் அவர் முன்மொழிவது நகைச்சுவை. இதன் மூலம் அவர் தன் இந்துத்துவா நண்பர்களை குஷிப் படுத்திக் கொண்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்.

இப்போது அவர் கோரி இருப்பது “மாதவிடாய் நேரத்திற்காக பெண்களுக்கு மாதம் 3 நாட்கள் விடுப்பு கூடுதலாகத் தர வேண்டும்’ என்பது.

இன்று அறிவியல் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. மாதவிடாய் காலங்களில் நேப்கின்கள் அணிந்து கொண்டு ஓட்டப் பந்தயம் வரைக்கும் கலந்து கொள்ளலாம் என்கிற அளவில் பேசப்படும் காலத்தில் இந்தியச் சனாதன ஆணாதிக்கச் சமூகத்தில் வேத காலம் முதல் இருந்துவந்த ஒரு பழக்கத்தை – அதாவது மாதவிடாய் எனச் சொல்லி மாதம் மூன்று நாட்கள் வீட்டின் ஒரு மூலையில் உட்கார வைக்கும் ஒரு பழக்கத்தை அவர் இன்று மீட்க முயற்சிப்பது யாரை குஷிப் படுத்த என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும்.

இது எப்படியான பின்விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தும்- ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். அலுவலகங்களில் இப்படி மூன்று நாட்கள் வராமல் போனவர்கள் பற்றி கிண்டல் அடிப்பது உட்பட ஆணாதிக்கச் சமூகம் இதை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ளும்? வேண்டுமானால் பெண்களின் இந்த தனித்துவமான பிரச்சினைகளைக் கணக்கில் கொண்டு ஆண்களுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் கேசுவல் லீவ் என்றால் பெண்களுக்கு 15 நாட்கள் அல்லது 20 நாட்கள் என்பதுபோலக் கொண்டுவரலாம். அப்படித்தான் எதையேனும் செய்ய வேண்டுமே ஒழிய எதாவது பார்ப்பனர்களால் பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவும், பத்திரிகைகளில் வர வேண்டுமென்பதற்காவும் செய்யும் இப்படியான குட்டிக்கரணங்கள் அடிப்பது சத்தம்போட்டுச் சிரிக்கத் தக்கது.