தமிழகம் வந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியும், கருப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரக்வீ தாக்கல் செய்துள்ள வழக்கில், ’’பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தபோதெல்லாம், எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டி, கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது. இதனால், தமிழகத்திற்கு வர வேண்டிய நலத்திட்டங்கள் முடங்கின. அத்தோடு அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவியில் உள்ள ஆளுநர், பிரதமர் போன்றோரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குற்றச்செயலாகும். ஆகையால், கருப்பு பலூன், கொடி காட்டிய கட்சிகளுக்கு தேர்தலில் நிற்கவும், மொத்தமாகவும் தடை விதிக்க வேண்டும்.

இதுதொடர்பாக ஏற்கனவே, தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளேன்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார். நீதிபதிகளான கிருபாகரன், சுந்தர் அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். ’’மனுதாரர் குறிப்பிட்ட, கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர். இந்த, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்சிகள் மற்றும் இயக்கங்களில், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், திராவிடர் கழகம், கம்யூனிட்ஸ்ட் கட்சிகள், தமிழ் புலிகள், மே 17 இயக்கம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.