கொரோனா காலத்தில் மக்களை மீண்டும் சீண்டுகிறது மத்திய அரசு. வீடுகளில் மக்களிடம் இருக்கும் தங்கத்தை மீட்க மத்திய அரசு திட்டம் தீட்டியிருக்கிறது.சுமார் 30ஆயிரம் டன் தங்கம் முடங்கி இருப்பதாகவும் அதை மீட்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் தங்கம் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் என்றாலே தங்க நகைகள் அலங்காரம் ஜொலிக்கும். எத்தனையோ பெண்கள் தங்கை நகை போடமுடியாமல் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். தங்க நகை போட்டு திருமணம் செய்வது தமிழக மக்களின் வாழ்க்கை முறைகளில் ஒன்றாகி விட்டது.மத்திய அரசு தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு வாழ்க்கை முறைகளில் தலையிடமாட்டோம் என்று சொல்லிவிட்டு தங்கம் விசயத்தில் தமிழர்கள் மீது குறிவைக்கிறது என்கிற குற்றச்சாட்டு மத்திய அரசின்மீது விழுந்துள்ளது.

 கணக்கில் காட்டாமல் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தானாக முன்வந்து விவரங்களை ஒப்படைப்போர் வரி மற்றும் அபராதம் மட்டும் செலுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்புப்பணத்தை மீட்பதாக உறுதியளித்த மத்திய அரசு, கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவர, சலுகை திட்டத்தை ஏற்கெனவே அறிவித்தது. இதன்படி, கருப்பு பணத்தை தானாக முன்வந்து தெரிவித்தால். 30 சதவீத வரி, 7.5 சதவீத கூடுதல் வரி, 7.5 சதவீதம் அபராதம் என மொத்தம் 45 சதவீதம் வரியை செலுத்தி விட்டு, மீதத் தொகையை வெள்ளையாக தங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதுபற்றி  எந்த விசாரணையும், நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அறிவித்தது. இருப்பினும் இந்த திட்டம் முழுமையாக வெற்றிபெறவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் முன்பாக, நாட்டில் 15.4 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இதில், 2 லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி வரை வங்கிக்கு திரும்பாது என மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், கிட்டதட்ட முழு அளவிலான பணமும் வங்கிக்கு திரும்பியது. இதுவும் மத்திய அரசுக்கு ஏமாற்றம் அளித்தது. பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு, பழைய 500, 1,000 பணத்தை வைத்திருந்தவர்கள் பலர் தங்க நகைகள், தங்கக்கட்டிகளாக மாற்றி விட்டனர்.

 வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் கணக்கில் காட்டாத நகை வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டம் அறிவிக்க உள்ளதாக கடந்த ஆண்டு அக்டோபரில் தகவல் வெளியானது.  இதன்படி, தனிநபர் ஒருவர் எந்த ரசீதும் இல்லாமலும், கணக்கில் காட்டாமலும் வைத்திருக்கும் தங்கத்தை அரசிடம் தெரிவித்து வரி செலுத்த வேண்டும்.  இதற்கான வரி 30 சதவீதம் முதல் 33 சதவீதம் வரை இருக்கலாம் என அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இப்படி ஒரு திட்டம் செயல்படுத்தும் எண்ணம் அரசிடம் இல்லை என மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.  தங்கத்தின் மீது மக்களுக்கு உள்ள மோகத்தை குறைக்கும் வகையில், நகை அடமான திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-16 பட்ஜெட்டில் அறிவித்தது.

 2017 ஆகஸ்ட் இறுதியில் வங்கிகள் மூலம் 11.1 டன் தங்கம் மட்டுமே இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டது.  கடந்த 2016ம் ஆண்டில் வருமான வரி 2வது திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. இதில் வருமான வரிச்சட்டம் 115 பிபிஇ பிரிவில் ஏற்கெனவே இருந்த 30 சதவீத வரியை 60 சதவீதமாக உயர்த்தி, கூடுதலாக 25 சதவீத கட்டணம் விதிக்க வழி வகை செய்யப்பட்டது.  இதன்படி கணக்கில் காட்டாத தங்கம் வைத்திருந்தால் 60 சதவீத வரி மற்றும் கட்டணம் சேர்த்து 75 சதவீத வரி விதிக்கப்படும். திருமணமான பெண் 500 கிராம், திருமணமாகாத பெண் 250 கிராம், குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர் 100 கிராம் வரை நகை வைத்திருந்தால் வரி விதிப்பில் இருந்து விலக்கு உண்டு.

 இந்நிலையில், வீட்டில் கணக்கில் காட்டப்படாமல் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி விதிக்கும் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  

தமிழகத்தை பொறுத்தவரை உறவினர்கள் நண்பர்களிடம் நகைகளை வாங்கி அடமானம் வைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.நடுத்தர மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல அவர்களின் சொத்து இந்த தங்க நகைகள் தான். நகை வாங்கும் போது வரி செய்கூலி சேதாரம் கொடுக்க வேண்டியது இருக்கிறது. இனி மத்திய அரசுக்கு வேற வரி செலுத்த வேண்டும் என்றால் நடுத்தர மக்களை உயிரோடு கொலை செய்வது போல் இருக்கிறது மத்திய அரசின் முடிவு.பெரும் பணக்காரர்கள் பதுக்கல்காரர்கள் தங்கம் கடத்தல்காரர்கள் யார் என்பதை கண்டுபிடிக்காமல் நடுத்தர மற்றும் ஏழைகளின் வயிற்றில் அடிப்பது போல் இத்திட்டம் இருக்கிறது. வருமானவரி இல்லையென்றால் ரேசன் கார்டுகளை அடிப்படையாக கொண்டு இவர்களுக்கெல்லாம் விதிவிலக்கு உண்டு என்று அறிவிக்கலாம் என்கிறார்கள் நடுத்தர வாழ்க்கை வாழும் மக்கள்.