அமைச்சர் துரைகண்ணு இறப்பு குறித்து பொய்யான அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கொரோனா தொற்று உள்ளாகி மூச்சுத்திணறால் அவதிப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு முதலில் விழுப்புரத்திலும், பின்னர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார்.

மறைந்த அமைச்சருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான  காவேரி மருத்துவமனையில் பதிவேடுகள்,  ஆவணங்கள் மாநில மேல் முறையீட்டு இயக்குநரால் ஆய்வு செய்து அறிக்கைகள் மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மறைந்த அமைச்சரின் உடல்நிலை பற்றியோ, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தோ அரசும், மருத்துவமனையும் மறைக்கவில்லை. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியும் அந்த மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார்.

அரசியல் செய்ய எத்தனையோ காரணங்கள் இருந்தபோதிலும், அமைச்சரின் இறப்பில் லாபம் தேடும் எதிர்க்கட்சி தலைவரை தமிழகம் பெற்றுள்ளது துரதிருஷ்டவசமானது. ஸ்டாலினின் செயல் கண்டிக்கத்தக்கது. மறைந்த அமைச்சரின் இறப்பு குறித்து பொய்யான அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது’’என அவர் தெரிவித்தார்.

 

இதனிடையே, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணம் குறித்து அவதூறு கருத்து கூறி, ஸ்டாலின் அநாகரிகமான அரசியல் செய்கிறார் என குற்றம்சாட்டினார். அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு நுரையீரலில் இருந்த தொற்று அதிகரித்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனக்கூறிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அமைச்சரின் மரணத்தில் ஸ்டாலின் யாரை குற்றம்சாட்டுகிறார் என கேள்வி எழுப்பினார்.