* விமானத்தில் பறந்து வந்து இறங்கி இந்த தொகுதியில் போட்டியிடுவோரையெல்லாம் வயநாடு மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு உள்ளூர் பிரச்னைகள் என்ன தெரியும்?: நிர்மலா சீதாராமன். (வயநாடு வாசிகள் ராகுலை நம்ப வேண்டாம், சரி. அப்ப குஜராத்துல பொறந்த மோடி உத்திரபிரதேசத்துல போட்டி போடுறாருங்களே மேடம். அவரையும் நம்ப வேண்டாமா....இதுதான் இடிக்குதுங்கோவ்!)

* லோக்சபா தேர்தலில் பி.ஜே.பி.யும், அ.தி.மு.க.வும் அதிகளவில் பணத்தை மக்களின் கையில் திணித்து, யாருக்கு வாக்களிப்பது என்று மனதளவில் முடிவெடுக்க விடாமல் மக்களை திக்குமுக்காடச் செய்துவிட்டனர்: கே.எஸ்.அழகிரி. (அண்ணே நீங்க ரெண்டு கட்சிகளையும் திட்டுறீங்களா இல்ல மக்களுக்கு வாரிக்கொடுத்து திக்குமுக்காட வைத்த வள்ளல்கள்னு புகழ்றீங்களான்னே புரியலை. எதுக்கும் ஒரு தடவை ஸ்கிரிப்ட்ட சிதம்பரத்துட்ட சொல்லிக்காட்டி திருத்திட்டு வாங்க பார்க்கலாம்.)

* சிங்கள அரசு இன்னமும் திருந்தவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. அதனால் அந்த அரசுக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை உணர்த்துகிறது: முத்தரசன். (நீங்க ஒண்ணுண்ணே எதையும் யோசிக்காம, பேசிக்காம பொசுக்கு பொசுக்குன்னு எதையாச்சும் வெள்ளந்தியா பேசிடுறீங்க. சிங்கள அரசுக்கு எதிரா யாரு போராடணும், ஏன் போராடணும்னு சொல்லுங்கப்பு. மொட்ட கட்டையா பேசுறது மாநில செயலாளர் பதவிக்கு அழகாவா இருக்குது?)

* மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான குண்டர் ராஜ்ஜியம் நடக்கிறது. கடத்தல்காரர்களின் சொர்க்க பூமி அது. இப்படிப்பட்ட ஆட்சி நடத்தும் மம்தாவெல்லாம் நேர்மை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது: அமித்ஷா. (ஒரு பெண் முதலமைச்சரை ‘குண்டர்’ன்னு சொல்ற அளவுக்கு அங்கே உங்க கட்சி செம்ம அடி வாங்கிட்டு இருக்குதுங்கிறது புரியுது. சி.பி.ஐ.யோட கண்லேயே அந்தம்மா விரலை விட்டு ஆட்டுனப்ப எதிர்த்து எதையும் பண்ண முடியாம பம்முனதெல்லாம் இந்த தேசத்தஆளுற உங்களுக்கு ச்சீ ச்சீயா இல்லையா தல? பின்னே எப்படி பாகிஸ்தான நசுக்குவீங்கன்னு நம்புறதாம்?)

* அமேதி தொகுதி மக்கள் என்ன பிச்சைக்காரர்களா? அவர்களுக்கு இலவசமாக ஷூ வழங்கியதன் மூலம் அந்த மக்களை ஸ்மிருதி இரானி அவமதித்துள்ளார்: பிரியங்கா காந்தி. (இலவசமாகொடுத்தால், அது அவமரியாதை செய்றதுன்னா...தமிழகத்துக்கு கொஞ்சம் வந்து பாருங்க ராகுல் தங்கச்சி. இங்கே சோத்துல இருந்து சரக்கு வரைக்கும் எல்லாமே எலெக்‌ஷன் நேரத்துல இலவசமா பாயும். தேர்தல் முடிஞ்சுடுச்சேன்னு கலங்காதீங்கோ, உங்களுக்குன்னே ஸ்பெஷலா நாலு தொகுதி இடைத்தேர்தல் ஷோ வெச்சிருக்கோம். டோண்ட் மிஸ் இட்.)