உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தற்போது உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, அங்கு ரவுடிகளின் ஆட்சி நடைபெற்று வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். அதில் உத்தரபிரதேச மாநிலத்தில் பொது மக்கள் சொல்லொணாத் துயரத்தில் இருப்பதால் அரசு சட்ட ஒழுங்கை சரி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், காசியாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் காணாமல் போன விவகாரம்  குறித்தும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் குற்றச் சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அரசு உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

கான்பூர், கோண்டா, கோரக்பூர் சம்பவங்களை முதல்வர் அறிந்திருப்பார் என கருதுவதாக கூறியுள்ள பிரியங்கா காந்தி, காசியாபாத்தில் ஒரு குடும்பத்திற்கு நேர்ந்த துயர சம்பவத்தை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புவதாகக் கூறியுள்ளார். காசியாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விக்ரம் தியாகி  காணாமல் போய் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது. அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் அஞ்சுகின்றனர், அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என பலமுறை கோரிக்கைகள் வைத்த போதிலும்,  இதுவரை காவல் துறை எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் அதில் எடுக்கவில்லை. இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். அந்த குடும்பம் மிகுந்த துயரத்தில் இருப்பதாகவும், காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ஒரு பொறுப்புமிக்க அரசாக அந்த குடும்பத்திற்கு உதவ வேண்டுமென காங்கிரஸ் சார்பாக வலியுறுத்துகிறேன் . காவல்துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழுமையாக உதவ முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் கடத்தல் சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. நாளுக்கு நாள் சட்ட ஒழுங்கு மோசமடைந்து வருகிறது. இந்த நேரத்தில் இந்த விஷயங்களில் முழுமையான உடனடி மற்றும் செயல் திறனுடன் நடவடிக்கைகள்  எடுப்பது காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் பொறுப்பாகும் என பிரியங்கா காந்தி அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அதேபோல கடந்த திங்கட்கிழமையன்று பிரியங்கா காந்தி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குறிவைத்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டார் அதில்,  உத்திர பிரதேச மாநிலத்தில் காவல்துறையின் காட்டு தர்பார் நடைபெற்று  வருகிறது, ஆனால் அதை கட்டுப்படுத்த மாநில அரசு இடமாற்றத்தை தவிர வேறு எதையும் செய்யவில்லை. உத்தரப்பிரதேச முதலமைச்சர் செய்தி பார்ப்பதை நிறுத்தி விட்டாரா?  மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உள்துறை அதிகாரிகள் கவனத்திற்கு செல்லவில்லையா? என பிரியங்கா காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடதக்கது.