ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்டுவர 1000 பேருந்துகளை பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்துள்ளார் . கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய் பரவலை  கட்டுப்படுத்த  முன்கூட்டியே இந்திய அரசு தேசிய ஊரடங்கு அறிவிப்பு செய்தது.  தற்போது அந்த ஊரடங்கு நான்காம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் வேலைக்கு சென்ற இடங்களிலேயே சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நீண்ட கோரிக்கைக்கு பின்னர் மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்காக  ரயில் இயக்கப்படும் என அறிவித்தது, பல்வேறு மாநிலங்களில் ரயில்  இயக்கப்பட்டு வருகிறது ஆனால் இந்த சலூகையால் எல்லா தொழிலாளர்களும் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .  ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதி இல்லாத பல கிராமங்களில்  கூட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிக்கியிருப்பதே இதற்கு காரணம் .  

இந்நிலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பொதுப் போக்குவரத்து இன்றி நடைபயணமாகவே தங்கள்  மனைவி குழந்தைகளுடன் பலநூறு கிலோமீட்டர் தூரத்திற்கு  பயணிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .  இந்நிலையில் பல்வேறு  இடங்களில் அவர்கள் சாலை விபத்துக்கு  ஆட்பட்டு உயிரிழக்கும்  சம்பவங்களும் நடந்தேறி வருகிறது .  இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தைச்  சேர்ந்த தொழிலாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ளனர் .  ஆகவே வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள ஏராளமான தொழிலாளர்களை மீட்டு வர காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 1000 பேருந்துகளை இயக்குவதாக அறிவிப்பு செய்துள்ளார் .குறிப்பாக பஞ்சாப் , ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களை மீட்க இந்த பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.   இந்நிலையில் பல வடமாநிலங்களில் இருந்து ஏராளமான உத்திர பிரதேச மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் அப்பேருந்துகள் மூலம் தங்கள் மாநிலத்திற்கு திரும்பி வருகின்றனர்.   ஆனால் அவர்களை மாநில எல்லையிலேயே  காவல் துறை தடுத்து  நிறுத்தியது .  இதனையடுத்து  பிரியங்கா காந்தி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு  வேண்டுகோள் வைத்ததற்குப் பின்னர்,  அவர்கள் மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர் .  

முதல்வருக்கு  பிரியங்கா வைத்த கோரிக்கையாவது :- முதலமைச்சர் அவர்களே ஏராளமான தொழிலாளர்கள் குடிக்க தண்ணீர் இன்றி உணவு இன்றி நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மாநிலத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் தயவு செய்து எழைத் தொழிலாளர்கள் விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் அவர்களை மாநிலத்திற்குள் அனுமதியுங்கள் என தெரிவித்திருந்தார்.   இதற்குப் பின்னர் இது  குறித்து கருத்து தெரிவித்துள்ள யோகி ஆதித்யநாத் ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்திருப்பதாக பிரியங்கா காந்தி தெரிவிக்கிறார் ,  ஆனால் அந்த பேருந்து விவரங்கள் குறித்து அவரிடம் கேட்டதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை .  அப்படி பேருந்துகள் குறித்து தங்களுக்கு கிடைத்த தகவல்படி பேருந்துகளுக்கு பதிலாக ஏராளமான  இருசக்கர வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்கள் ஆட்டோ , கார் போன்றவை அதில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது என பிரியங்காவை அவர் விமர்சித்துள்ளார் . ஆனாலும்  பிரியங்காவின் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர் .