தனி விமானத்தில், 5 நண்பர்களுடன் மொரிசியஸ் நாட்டிற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சென்று இருப்பது உளவுத்துறை அதிகாரிகளை அலர்ட் ஆக்கியுள்ளது.

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக பணம் வருவதற்கு ஒத்துழைக்கும் நிறுவனங்கள் பல இருக்கும் ஒரு நாடு தான் மொரிசியஸ். பொருளாதார ரீதியில் மிகவும் முன்னணியில் உள்ள இந்த நாடு சுற்றுலாப் பயணிகளுக்கும் சொற்கம் போன்றது. நான்கு புறமும் கடல், உள்ளே இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் என உலகின் பல நாட்டு சுற்றுலாப்பயணிகளையும் மொரிசியஸ் பல வருடங்களாக ஈர்த்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் அல்ல, வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்களுக்கும் மொரிசியஸ் ஒரு சொர்க பூமி தான்.

உதாரணத்திற்கு இந்தியாவில் ஒரு தொழில் நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்வதற்கு பல விதிகள் உள்ளன. குறிப்பிட்ட தொகையை தாண்டி வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாது. ஆனால் மொரிசியசில் இப்படி முதலீடு செய்வதற்கு என்றே பல்வேறு நிறுவனங்கள் உண்டு. உதாரணத்திற்கு ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு தயாநிதி மாறன் விற்க செய்ததாக ஒரு புகார் உண்டு. இதற்கு பிரதிபலனாக மாறன் சகோதரர்களின் சன் டிடிஎச் பிசினசில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது.

இந்த முதலீடு மொரிசியல் நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் சன் குழுமத்திற்கு கிடைத்தது. இது தொடர்பான வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளன. இதே போல், கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் மொரிசியஸ் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணப்பறிமாற்றம் நடைபெற்றது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இப்படி இந்தியாவில் சட்டவிரோத பணப்பறிமாற்றம் நடைபெற உதவும் நிறுவனங்கள் அதிகம் உள்ள மொரிசியசிற்கு தான் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா – மொரிசியஸ் இடையே விமானப்போக்குவரத்து இல்லை. ஆனால் தேனி எம்பியான ரவீந்திரநாத் தனி விமானம் மூலம் மொரிசியஸ் சென்றுள்ளார். தனி விமானத்தில் இங்கிருந்து அங்கு செல்ல வேண்டும் என்றால் மத்தய அரசிடம் மட்டும் அல்ல மொரிசியஸ் அரசிடமும் முன் அனுமதி பெற வேண்டும். இவற்றை எல்லாம் பெற்றுத்தான் ரவீந்திரநாத் அந்த நாட்டிற்கு சென்றுள்ளார். அதவும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு விட்டுக்கொடுத்த சில நாட்களில் ரவீந்திரநாத் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நண்பர்களுடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மேற்கொண்டிருக்கும் இந்த பயணம் உல்லாசப்பணம் என்று அவரது தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவில் யார் அதிகாரம்மிக்கவர்கள் என்கிற போட்டி எழுந்துள்ளது. ஓபிஎஸ் உடனான அதிகார மோதலில் இபிஎஸ்சின் கைகள் ஓங்கியுள்ளன. இப்படி ஒரு சூழலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் உல்லாசப்பயணம்மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அதுவும் சட்டவிரோத பண விஷயங்களுக்கு பெயர் போன மொரிசியசை ஓபிஎஸ் மகன் தேர்வு செய்ததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. இதற்கிடையே ஓபிஎஸ் மகன், இந்த பயணத்தை திட்டமிட்டது முதல் அனுமதி பெற்று தனி விமானத்தில் பறந்தது வரை அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசின் உளவுத்துறை மட்டும் அல்லாமல் மாநில அரசின் உளவுத்துறையின் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு கண்காணித்ததாக சொல்கிறார்கள். ஏனென்றால் தேர்தல் சமயத்தில் இப்படி ஒரு பயணத்தை ஓபிஎஸ் மகன் மேற்கொள்வது ஏன் என்பதை கண்டறிய அவர்கள் கண்கொத்திப் பாம்பாக பின்தொடர்ந்து வருவதாக கூறுகிறார்கள்.