கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவுவதற்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணிச்சுமையை குறைக்கும் வகையிலும் செவிலி என்ன புதிய ரோபோக்களை தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர் .  கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  இதில் தமிழகத்தில் கொரோனா வைரஸின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ,  மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது .  இந்நிலையில் கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் வைரஸுக்கு பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இது மருத்துவர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி  உள்ள நிலைகள் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக் கழகம்  ஒன்றின் ரோபோட்டிக்ஸ் ஆய்வு மைய பேராசிரியர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தலைமையிலான குழுவினர் ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் உதவியுடன் புதிய வகை ரோபோக்களை உருவாக்கியுள்ளனர் .  இந்த ரோபோக்களுக்கு செவிலி என பெயரிடப்பட்டுள்ளது .  இந்த ரோபோக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்கள் இருக்கும் வார்டுகளுக்கு சென்று அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது ,  இந்த ரோபோக்கள் வார்டுகளுக்குள் செல்லும்போது நோயாளிகளுடன் மருத்துவ பணியாளர்கள் தொலைவிலிருந்து காணொளி வாயிலாக பேச வசதி செய்யப்பட்டுள்ளது . 

 

இந்த ரோபோக்களை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதன் மூலம்,   பாதிக்கப்பட்டவர்களுடன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நேரடி தொடர்பில் இருப்பதை இதன் மூலம்  ஓரளவிற்கு கட்டுப்படுத்தி வைரஸ் தொற்றால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .  இந்நிலையில் இந்தவகை ரோபோக்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி ஆகியோர் ஆய்வு செய்து இந்த ரோபோக்களை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளனர் .  இந்நிலையில் தற்போது 5 ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன .  இந்த ரோபோக்கள் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் தேவைப்படும் பட்சத்தில் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையில் கூடுதல் ரோபோக்களை  உருவாக்கலாம் எனவும் பேராசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.