பாரதப் பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி அசாம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த ஆண்டு விழாவில் உரையாற்ற உள்ள அவர், அசாமில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு  நில பட்டா வழங்க உள்ளார் என பிரதம அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாள் ஜனவரி 23 முதல் ஒரு வாரத்திற்கு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாட்டை மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா  அமைச்சகம் செய்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி மேற்குவங்கம் 23 ஆம் தேதி வருகை தர உள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் ஜனவரி 23ஆம் தேதி தேசிய அளவில் சிறப்பான முறையில் கொண்டாட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.  நேதாஜி  நாட்டுக்கு ஆற்றியுள்ள தன்னலமற்ற சேவை மற்றும் அவரது தீராத விடுதலை உணர்வையும் போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் 23ஆம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தேச உணர்வை ஊட்டும் வகையில் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை அவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த விழாவை கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு  சின்னம் அமைந்துள்ள வளாகத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் நேதாஜி குறித்த நிரந்தர கண்காட்சி மற்றும் ப்ரொஜெக்ஷன் மேப்பிங் ஷோ திறக்கப்பட உள்ளது. நேதாஜி நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் முத்திரையும் பிரதமரால் வெளியிடப்படும். நேதாஜியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட "அம்ரா நியூட்டன் ஜூபோனரி டூட்" என்ற கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 

இந்த நிகழ்வுக்கு முன்னர், கொல்கத்தாவின் தேசிய நூலகத்தை பிரதமர் பார்வையிடுவார், அங்கு ஒரு சர்வதேச மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதாவது “21 ஆம் நூற்றாண்டில் நேதாஜி சுபாஸின்போராட்ட்த்தை நினைவு கூறும் வகையில் அது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் மத்தியில் பிரதமர் உரை நிகழ்த்த உள்ளார். 

முன்னதாக அசாமின் சிவசாகரில் 1.06 லட்சம்  பேருக்கு நில உரிமை பட்டாவை பிரதமர் மோடி வழங்க உள்ளார். அம்மாநிலத்தின் பழங்குடியின மக்களின் நில உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக அசாம் மாநில அரசு அவசர தேவையை கணக்கில் கொண்டு, நில உரிமை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய நில கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. அக்கொள்கையின் அடிப்படையில் அசாம் பழங்குடியின மக்களுக்கு புதிய நில உரிமை பட்ட வழங்கப்பட உள்ளது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு 5.75 லட்சம் நிலமற்ற குடும்பங்கள் இருந்தன. தற்போது அவர்களுக்கு படிப்படியாக நிலம் வழங்கப்பட்டு வருகிறது. 2016 மே மாதம் முதல் 2.28 லட்சம் நில பட்டாக்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி 23 அன்று நடைபெறும் விழாவில் மோடி 1.6 லட்சம் நிலப் பட்டாக்களை வழங்குகிறார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.