டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா கலைஞர் அறிவாலயம் வருகிற 2 ஆம் தேதி திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்களை சந்திக்கவுள்ளார். இதனை விமர்சித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டெல்லி அறிவாலயம் திறப்பு
டெல்லியில் தீன் தயால் உபாத்யாயா மார்க் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடத்தின் அருகில் திமுகவிற்கு இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 மாடி கட்டிடங்களை கொண்ட டெல்லி அண்ணா அறிவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கட்டிட பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் கட்டிடத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் வருகிற 2 ஆம் தேதி அந்த கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி அறிவாலயம் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்றடைந்தார். இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனு கொடுத்தார்.

துபாயில் முதலீடு செய்தாரா?
இந்தநிலையில் முதலமைச்சர் டெல்லி பயணத்தை விமர்சித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணத்தின் மர்மம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முதலமைச்சர் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றாரா? அல்லது முதலீடு செய்ய துபாய் சென்றாரா ? என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து ஊடகங்களும், நாளிதழ்களும், வாரப் பத்திரிகைகளும் விவாதங்கள் நடத்தி வருகின்றதாகவும் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளும் பல்வேறு புகார்களை எழுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு முதல்வரின் வெளிநாட்டுப் பயண நிகழ்சிகளை அங்குள்ள இந்திய தூதரகம் மேற்கொள்ளாமல், முதல்வரின் மருமகனும், மகனும் செய்தது ஏன் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மோடி மயங்க மாட்டார்
சர்க்காரியா கமிஷன் வழக்குகளில் இருந்து தப்பிக்க 1980 களில் "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக" என்று திருமதி இந்திராகாந்தியின் காலில் கருணாநிதி விழுந்ததாக தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தமிழகம் வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, கோ பேக் மோடி (Go Back Modi) என்று கருப்பு பலூன் பறக்கவிட்டவர் மு.க. ஸ்டாலின் என தெரிவித்துள்ளார். தி.மு.க-வினர் மேடை தோறும் பிரதமர் பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் தரக்குறைவாக விமர்சித்ததாகவும் கூறியுள்ளார். ஸ்டாலினின் மாய் மாலத்திலும், நாடகத்திலும் மயங்க, பிரதமர் நரேந்திர மோடி, இந்திராகாந்தி அம்மையார் அல்ல என்று தெரிவித்துள்ளார். சட்ட விரோத பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டு உண்மை என்றால், உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும் என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணத்தை டேமேஜ் செய்துள்ளார்.
