prime minister modi meeting with chief minister palanisamy
சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமி மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
தினத்தந்தி நாளிதழின் பவளவிழா மற்றும் பிரதமர் அலுவலக இணை செயலாளர் சோமநாதனின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள ஐ.என்.எஸ் விமானப்படை தளத்திற்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக பாஜக தலைவர்கள் ஆகியோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன்பின்னர், தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தமிழக ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் கடந்த 6 தினங்களாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் மற்றும் தலைமை செயலாளரிடம் பிரதமர் கேட்டறிந்தார். மழை பாதிப்புகள், டெங்கு பாதிப்பு உள்ளிட்ட கடந்த சில மாதங்களாக தமிழகம் சந்தித்துவரும் தொடர் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஏற்படும் தொடர் பாதிப்புகள் மற்றும் பேரிடர்களை எதிர்கொள்ள தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தினத்தந்தி பவளவிழா நடக்கும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி.
