மறைந்த முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு மு.க.ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்பட திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். ஸ்டாலினிடம் அழகிரி குறித்து கேட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதி 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் மற்றும் தி.மு.க தொண்டர்கள் என ஏராளமானவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனால் ராஜாஜி அரங்குத்தில்  சாரைசாரையாக கூட்டம் அலைமோதுகின்றன. கருணாநிதியின் உடல் அருகே அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் நின்றிருந்தனர். 

அஞ்சலி செலுத்த வருவோர்கள் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் ஆறுதல் கூறி சென்றனர். ஆனால் அப்பகுதியில் அழகிரியின் முகம் தென்படவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடமும் துக்கம் விசாரித்தார். கனிமொழியின் தலையில் கைவைத்து ஆறுதல் கூறினார். 

பிறகு அழகிரி குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஸ்டாலின் அதிக நேரம் நிற்பதாலும் சில அசெளகரியங்களாலும் ராஜாஜி ஹாலின் பின்பகுதியில் அவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்றார். அஞ்சலி செலுத்தவரும் முக்கிய பிரமுகர்கள் சிலர் அழகிரியையும் சந்தித்துவிட்டுதான் செல்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.