தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது கொஞ்சம் கூட மரியாதையே இல்லை என்பதை பிரதமர் மோடி, நேற்று நடந்த மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் வெளிப்படுத்தினார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பன்னீர்செல்வத்தை வழிநடத்தியது, தற்போது அதிமுக ஆட்சியை இயக்குவது என அனைத்துமே டெல்லியின் கட்டுப்பாட்டில் உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் பிரிந்து வந்தபோது ஓபிஎஸ்-சை இயக்கியது, கட்சி மற்றும் சின்னத்தை முடக்கியது, இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனை கைது செய்தது, தினகரனையும் சசிகலாவையும் ஒதுக்கிவிட்டு பழனிசாமி-பன்னீர்செல்வம் அணியை இணைத்தது, ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்கு கட்சியின் பெயரையும் சின்னத்தையும் ஒதுக்கியது என அனைத்திற்குமே பிரதமர் மோடியும் மத்திய பாஜக அரசும்தான் காரணம் என கூறப்படுகிறது.

அதை ஒப்புக்கொள்ளும் வகையில் அண்மையில், பிரதமர் மோடிதான் இரு அணிகளும் இணையுமாறு கேட்டுக்கொண்டதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்நிலையில், தன்னால் இயக்கப்படுபவர்களுக்கு நாம் ஏன் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பிரதமரின் எண்ணம் நேற்றைய விழாவில் அப்பட்டமாக வெளிப்பட்டது.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் முதல்வர்களாக இருந்தபோது மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களும், பிரதமர்களும் அவர்களுக்கு மரியாதை கொடுத்தனர். ஆனால், சுயம் இல்லாமல், தன்னால் இயக்கப்படும் ஒரு அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பிரதமர் மோடி எப்படி மரியாதை கொடுப்பார்? கண்டிப்பாக கொடுக்க மாட்டார். அதுதான் நேற்று நடந்தது.

அது நேற்று நடந்த மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் வெளிப்பட்டது. விழாவில் பேசிய பிரதமர் மோடி, ”ஸ்ரீ பன்வாரிலால் புரோஹித் ஜி” என மரியாதையாக குறிப்பிட்டார். அதன்பிறகு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரை வெறும் பெயரை மட்டுமே குறிப்பிட்டார்.

ஆனால், ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிடும்போது, ”ஜெயலலிதா ஜி” என மரியாதையாக குறிப்பிட்டார். இதிலிருந்து, யாருக்கு மரியாதை கொடுக்க வேண்டும், யார் மரியாதைக்கு தகுதியில்லாதவர்கள் என்பதில் பிரதமர் மோடி தெளிவாக இருப்பது தெரிகிறது. தமிழக ஆட்சியாளர்களுக்கு மரியாதை அளிக்கவே தேவையில்லை என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் பிரதமர் மோடி.

மேடை நாகரிகம் கருதிகூட முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு மரியாதை வழங்க பிரதமர் விரும்பவில்லை. அந்தளவிற்குத்தான் அவர்கள் மீதான மதிப்பீடு பிரதமருக்கு உள்ளது. 

ஆனால் மரியாதை கூட தேவையில்லை. பதவிதான் முக்கியம் என ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இதைவிட வெட்கக்கேடான விஷயம் வேறு தேவையா? என அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.