கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆகஸ்ட் 11 அன்று சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டதால், உடல் நிலையில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் அவருடைய உடல் நிலை இன்று கவலைக்கிடமானது.


 நுரையீரல் செயலிழக்கும் அளவுக்கு சென்றதால், அவரைக் காப்பாற்ற தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி வசந்தகுமார் இன்று மாலை உயிரிழந்தார். வசந்தகுமார் மரணத்துக்கு பல தலைவர்களும் இரங்கலை தெரிவித்துவருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியும் வசந்தகுமார் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எச். வசந்தகுமார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தின் முன்னேற்றம் குறித்த அருடைய ஆர்வத்தை நான் எப்போதும் பார்த்துள்ளேன். அவருடைய குடும்பத்துக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்“ என்று மோடி தெரிவித்துள்ளார்.