கொரோனாவுக்கு   எதிரான போராட்டத்தில் நம்பிக்கையளிக்கும் நடவடிக்கைகள் எதையும் சொல்லாமலே மார்ச் 22 சுய ஊரடங்கு,  கைதட்டல் என்று மட்டுமே பிரதமர் அறிவித்துள்ள நிலையில் மக்களின் ஒருமைப்பாடே மகத்தான சக்தி என்ற அடிப்படையில்  11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  இந்நாளைக் கடைப்பிடிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேண்டுகோள் விடுத்துள்ளது.கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா கிருமிக்கு எதிரான போராட்டத்தில் மார்ச் 22 மக்கள் ஒருமைப்பாடு தினமாகக் கடைப்பிடித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

ஆயினும், பிரதமர் இந்தப் போராட்டத்தின் சுகாதார, பொருளாதார அம்சங்களை எதிர்கொள்வதற்கான திட்டவட்டமான நடவடிக்கைகள் பற்றி எதுவும் கூறவில்லை என்பதால், இந்த தினத்தை பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துக் கடைப்பிடித்திடுமாறு மார்க்சிஸ்ட் கட்சி மக்களைக் கேட்டுக்கொள்கிறது.

1) விரிவான மக்கள் பகுதிகளிடையே,  குறிப்பாக தடுமம், காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் இருப்பவர்ளுக்கு கிருமித்தொற்று சோதனைகளை அதிகப்படுத்துக.

 2) போதிய இலவசப் பரிசோதனை, மருத்துவமனை வசதிகள், தனிமை சிகிச்சைக்கூடங்கள், சுவாசக்கருவிகளுடன் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்த நிதி ஒதுக்கீடுகளை அதிகரித்திடுக.  கொரோனா நோயாளிகளுக்கு இலவசச் சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளை உட்படுத்துக.

 3) ஜன் தன் கணக்குகளுக்கும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனை வருக்கும் ரூ.5,000 ரொக்கப் பரிமாற்றம் செய்திடுக.  மாநிலங்க்ளுக்கு இதற்காக மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். 

4) புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் உட்பட வறுமைக்கோட்டுக்கு கீழ்/மேல் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் பொது விநியோக முறை மூலமாக,  இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் உள்ள 7.5 கோடி டன் தானிய இருப்பைப் பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு இலவச ரேசன் வழங்குக.

5) மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை 150 நாட்களாக விரிவுபடுத்துக, இதைப் பயன்படுத்திக்கொள்ள நாடுகிற அனை வருக்கும் வேலை வழங்கப்படுவதை உறுதிப்படுத்துக.

6) இன்றியமையாத் தேவைப் பொருள்கள் அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் பொது விநியோக முறையை விரிவாக்கி, வலுப்படுத்திடுக.

7) பள்ளிகளின் மதிய உணவுத் திட்டத்திற்கு மாற்றாக, அக்குழந்தைகளின் வீடுகள்/குடும்பங்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்குக.

8) தொற்றுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிதியுதவித் திட்டங்கள் ஏற்படுத்துக. இந்த நிதியுதவி் குழுமங்களும் நிறுவனங்களும் அடுத்த மூன்று மாதங்களுக்குக்  கதவடைப்பும் வேலை நீக்கமும் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு இருக்க வேண்டும். 

 

 9) வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, முறைசாரா, அமைப்புசாரா துறைகளின் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நிதியுதவி/படிகள் நீட்டிக்கும் வகையில் நிதியம் ஒன்றை ஏற்படுத்துக.

 10) கொரோனா கிருமி பிரச்சினையால் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

11) சிறிய, நடுத்தரத் தொழில் பிரிவினர் மற்றும் சில்லரை வர்த்தகர்களுக்கு வங்கிக் கடன்களைச் செலுத்துவதற்கு ஓராண்டு கால அவகாசம் தரப்பட வேண்டும்.என வலியுறுத்தப்பட்டுள்ளது.