பா.ஜ.க. தனது அடுத்த பிரதமரை முடிவு செய்து விட்டதா? அல்லது நநேர்திர மோடிக்கு பதிலாக அமித் ஷாவை பிரதமராக உயர்த்துவதற்கான பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதா?
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பிரதமர் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அழைத்த நிலையில் பாஜக தனது அடுத்த பிரதமரை தேர்ந்தெடுத்து விட்டதா என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

அஸ்ஸாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பொது நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்றார். அஸ்ஸாமி மொழியில் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசிக்கொண்டிருந்தபோது, கவனக்குறைவாக அமித் ஷாவை மத்திய உள்துறை அமைச்சர் என்று சொல்வதற்குப் பதிலாக பிரதமர் அமித் ஷா என்று அழைத்தார். கவனக்குறைவாகவோ அல்லது வாய் தவறியோ ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியதை தற்போது எதிர்க்கட்சிகள் பிடித்துக்கொண்டுள்ளன. குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், அமித் ஷாவை குறி வைத்து விமர்சனம் செய்ய பயன்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அஸ்ஸாம் காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசிய வீடியோவை பதிவிட்டு தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறது. அதில், “சர்பானந்தா சோனாவாலை அஸ்ஸாமின் முதல்வராக இருந்தபோது, தேஜ்பூர் எம்.பி. ஸ்ரீ பல்லப் லோச்சன் தாஸ் பல சந்தர்ப்பங்களில் பொது வெளியில், அப்போது கேபினட் அமைச்சராக இருந்த ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அஸ்ஸாமின் முதல்வர் என்று குறிப்பிட்டார். தற்போது பதவியில் இருக்கும் முதல்வர் (ஹிமந்தா பிஸ்வா சர்மா) தாஸ் செய்ததை செய்கிறாரா? பா.ஜ.க. தனது அடுத்த பிரதமரை முடிவு செய்து விட்டதா? அல்லது நநேர்திர மோடிக்கு பதிலாக அமித் ஷாவை பிரதமராக உயர்த்துவதற்கான பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதா? தாஸின் உதாரணத்தை பார்த்தால், இது நாக்கு தவறியதாக தெரியவில்லை” எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளது.
ஆனால், அஸ்ஸாம் பாஜக இதை சமாளித்து பதில் கூறி வருகிறது. வாய் தவறி முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவ்வாறு பேசிவிட்டதாக சமாளித்துள்ளது.
