பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று சென்னையில் தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் என்ற அமைப்பு நடத்திய " வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல் " கருத்தரங்கில் பத்திரிகையாளர்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசியிருந்தார்.

பத்திரிகையாளர்களை கம்னாட்டிகள், நாய்கள் என்று விமர்சித்த ராமதாஸ், ‘இனி மரம் வெட்டி என்று யாராவது கேட்டால் கேட்பவனைதான் வெட்ட வேண்டும்’ என்றும் வன்முறையைத் துண்டும் வகையில் பேசினார்.

ராமதாஸின் இந்தப் பேச்சுக்கு  சென்னை பிரஸ் கிளப்பின் இணை செயலாளர் பாரதி தமிழன்  வெளியிட்டுள்ள அறிக்கையில்; “பத்திரிகையாளர்கள் , ஊடகங்கள் விமர்சனத்துக்கு உட்பட்டது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் வயது முதிர்ந்த ஒரு அரசியல் தலைவர் வாய் உதிர்த்த அநாகரீக வார்த்தைகள் கண்டன அறிக்கையில் கூட குறிப்பிடக்கூடியதாக இல்லை. பொது வாழ்வில் பக்குவமற்ற இந்த பேச்சுக்களை அனைவரும் கண்டிக்க வேண்டும். டாக்டர் ராமதாஸ் அவர்களின் தரக்குறைவான பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தனது பேச்சுக்காக டாக்டர் ராமதாஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள பாரதி தமிழன், மேலும்

“முன்மாதிரி கட்சி நடத்துகிறேன் என்பவர்கள் இப்படி பேசுவது என்பது மிகப்பெரிய முரண். வயதின் காரணமாக கண்டனத்தை கவனத்துடனே சென்னை பத்திரிகையாளர் மன்றம் பதிவு செய்கிறது .வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல் கருத்தரங்கில் வெறுப்பை கக்கிய போக்கு கண்டனத்துக்கு உரியது.இதுபோன்ற பேச்சுக்களை செயல்களை ஜனநாயகத்தின் உரிமையாளர்களான பொதுமக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகிறோம். கோபம் , விரக்தி என உள்ளக்குமுறல்களை ஊடகங்கள் மீது கொட்டாதீர் என பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

அரசியல்வாதிகள் , காவல்துறையினர்,அதிகாரிகள் என பொதுவாழ்வில் உள்ளவர்கள் சமீபகாலமாக பத்திரிகையாளர்கள் மீது அமில - அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்துவதும், தாக்குதல் நடத்துவதும் , மோசமாக நடந்துகொள்வதும் அதிகரித்து வருகிறது. இந்தப்போக்கை தொடர்ந்து கண்டித்து வருகிறோம். இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்த ஊடக ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவன தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையும் வேண்டுகிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார்.