Presidential Election Meira Kumar to take on Ram Nath Kovind Is this a lost battle for Opposition
ஜூலை 17-ந் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக முன்னாள் மக்களவை சபாநாயகரும், தலித் சமூகத்ைதச்சேர்ந்தவருமான மீரா குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பா.ஜனதா கூட்டணி சார்பில் தலித் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கடும் போட்டியாக மீரா குமார் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ஜனாதிபதி தேர்தல் இரு தலித் வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியாக மாறி உள்ளது.
17-ந்தேதி தேர்தல்
ஜூலை 24-ந் தேதியோடு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் அறிவிக்கை வௌியிட்டது.
அதன்படி, வேட்புமனுத்தாக்கல், கடந்த 14-ந் தேதி தொடங்கியது. வரும் 28ந் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 30-ந் தேதி மனு பரிசீலனை நடக்க உள்ளது.
தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் ஜூலை 17-ந் தேதி தேர்தலும், 20-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
பீகார் ஆளுநர்
இதற்கிடையே பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தங்களின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம் நாத் கோவிந்தை அறிவித்தது.
பெயர்கள் பரிசீலனை
அதேசமயம், எதிர்க்கட்சிகள் சார்பில் வலிமையான வேட்பாளரை களத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மக்களவையின் முன்னாள் சபாநாயகர் மீரா குமார், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, இந்தியக் கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா, டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், மகாத்மா காந்தியின் பேரன் கோபால் கிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன.
17 கட்சிகள் ஆலோசனை
இதையடுத்து, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்ய நாடாளுமன்றத்தின் நூலக அரங்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 17 கட்சியின் தலைவர்கள், பிரதிநிதிகள் நேற்று கலந்துகொண்டு ஆலோசித்தனர்.
தலைவர்கள் பங்கேற்பு
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே. அந்தோனி, குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்,அகமது படேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மாயாவதி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ள இயலாததால், அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
முடிவு
இந்த கூட்டத்தின் முடிவில் 17 எதிர்க்கட்சிகளின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகரும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான மீரா குமாரை நிறுத்துவது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
மீரா குமார்
இந்த முடிவு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகையில், “ ஜனாதிபதி தேர்தலில எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரை நிறுத்தமுடிவுசெய்துள்ளோம். எங்களோடு மற்ற கட்சிகளும் இணைவார்கள் என நம்புகிறோம்’’ என்றார்.
4 பேரின் பெயர்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “ இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மீரா குமார், சுஷில்குமார் ஷிண்டே, பாலசந்திர முங்கேக்கர், பிரகாஷ் அம்பேத்கர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், அனைத்து கட்சிகளும் மீரா குமாரை ஒரு மனதாக தேர்வு செய்தன’’ என்றார்.
நிதிஷிடம் வலியுறுத்துவோம்
இதற்கிடையே காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்ற, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் பா.ஜனதா வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், “ நிதிஷ் குமார் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசி அவரின் முடிவை திரும்பப்பெறக்கோரி வேண்டுகோள் விடுப்பேன். கூட்டணியை உடைத்து விடாதீர்கள் என்று தெரிவிப்பேன்’’ என்றார்.
