president candidate will decided in karunanidhi birthday

ஜூலை மாதம் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியும், ஆளும் பா.ஜனதா கட்சி சார்பில் ஜார்கண்ட் மாநில ஆளுநரும், பழங்குடியின பெண்ணான திரவுபதி முர்மு நிறுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் மாதம் 3-ந்தேதி சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் தி.மு.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த விழாவின் போது, குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து முடிவு செய்யலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியின் பெயரை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிதான் முதலில் முன்மொழிந்தார். கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை மேற்கு வங்காள மாநிலத்தின் ஆளுநராக கோபால கிருஷ்ண காந்தி இருந்துள்ளார். பாஜனதா ஆட்சிக்கு வந்தவுடன், அவர் திரும்ப அழைக்கப்பட்டார்.

1946ம் ஆண்டு ஏப்ரல் 22-ந்தேதி பிறந்த கோபால கிருஷ்ண காந்தி, இந்திய ஆட்சிப்பணியிலும், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளிலும் தூதராகவும் பணியாற்றிய அனுபவத்தை கொண்டவர்.

மேலும், குடியரசு தலைவருக்கு செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறார். ஆதலால், இவரை தேர்வு செய்யலாம் என மம்தா பானர்ஜி வெளிப்படையாக எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆதலால், இவரின் பெயர் குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்வில் அடிபடுகிறது.

அடுத்தார்போல், எதிர்க்கட்சிகள் இவரை தேர்வு செய்யாதபட்சத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரின் பெயரையும் ஆலோசிக்கப்பார்கள் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பல கட்டப் பேச்சுக்களை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடத்தியுள்ளனர். 

குடியரசு தலைவர் வேட்பாளருக்கான இறுதி முடிவு இம்மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் எதிர்க்கட்சிகள் எடுக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இதில் பா.ஜனதா கட்சி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரவுபதி முர்மு நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 

ஒருவேளை அவர் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டால், பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் பெண் குடியரசு தலைவர் எனும் பெருமையைப் பெறுவார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முர்மு, மூத்த அரசியல் தலைவர் பிராஞ்சி நாராயண் துடுவின் மகளாவார். 20 ஆண்டுகால அரசியல் அனுபம் கொண்ட முர்மு, மாநில அரசில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 

இதற்கிடையே எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு நிலைப்பாட்டை எடுத்து, ஒரு வேட்பாளரை முன்மொழிந்தால், நடுநிலை வகிக்கும் மாநில அரசியல் கட்சிகள் அதை தீர்மானிக்கும் சக்திகளாக குடியரசு தலைவர் தேர்தலில் இருப்பார்கள்.

குறிப்பாக ஒடிசா மாநில ஆளும் கட்சியான பிஜூ ஐனதா தளம், தி.மு.க., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆகியவற்றின் நிலைப்பாடும் மிக முக்கியமாகும். குடியரசு தலைவர் தேர்தலில் யார் பக்கம், எந்த முடிவு எடுத்துள்ளதாக இதுவரை எந்த கட்சிகளும் ெவளிப்படையாகக் கூறவில்லை.

இதற்கிடையே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா ஜுன் 3-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கு எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் சங்கமிக்கும் அந்த இடத்தில் முக்கியத்தும் வாய்ந்த குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.