தே.மு.தி.க.வினருக்கு வாய் நீளம்! என்பது பொதுவான விமர்சனம். அரசியல் செல்வாக்கு இருக்குதோ, இல்லையோ, தன்னையும் தைரியசாலின்னு காட்டிக் கொள்ள, ஏதாவது விமர்சன கருத்தை அள்ளிவிட்டு கெத்துக் காட்ட முயல்வதே அக்கட்சியின் பிறவிக் குணம். 

அரசியலில் விஜயகாந்த் பஞ்ச் டயலாக் பேசியபோது எதிர்கட்சிகள் பதறின. ஆனால் அவருக்குப் பின் பிரேமலதா உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் இப்படி பேசும்போது, பதில் தாக்குதல் நடத்தி அவர்களைப் பஞ்சராக்குகின்றார்கள். அந்த வகையில் இப்போது தி.மு.க.விடம் வாயைக் கொடுத்து வகையாக வாங்கிக் கட்டியிருக்கிறார் பிரேமலதா. அதாவது நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்திட, கூட்டணி உறுப்பினர் எனும் முறையில் விஜயகாந்த் தரப்பை அழைத்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒரேயொரு நாள் மாலையில் சில வீதிகளை சுற்றியதிலேயே விஜயகாந்த் ஓவர் டல்லாகிவிட்டார். எனவே வழக்கம்போல் பிரேமலதாவே கிளம்பினார். 

உடனே அ.தி.மு.க.வினரோ “நீங்க வர்றதெல்லாம் ஓ.கே. ஆனால் ‘குட்கா விஜயபாஸ்கர்! புல்வாமா தாக்குதலை நடத்திய மோடி!’ன்னு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துல உளறிக் கொட்டின மாதிரி இப்பவும் பேசி, எங்களுக்கு சிக்கலை உண்டாக்கிடாதீங்க.” என்று கடும் கண்டிஷன் போட்டே, பிரசார ரூட் மேட்டை கொடுத்தனர். பிரசாரத்தில் மைக் பிடித்த பிரேமலதா ரொம்ப கவனமாக வார்த்தைகளை விட்டார். அதேவேளையில் ஸ்டாலினை ஒரு பிடி பிடித்தவர்...”எங்கள் கூட்டணி இருக்கும் வரையில் எந்த காலத்திலும் தி.மு.க. எனும் கட்சி ஆட்சி கட்டிலில் அமர முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துதான் நடக்கும்.” என்று வெளுத்துவிட்டார். 

’அப்பாடா எதையும் உளறி வெச்சு, நமக்கு  ஏழரையை இந்தம்மா கூட்டல’ என்று அ.தி.மு.க.வினர் நிம்மதியாகினர். ஆனால் தேவையில்லாமல் ஸ்டாலினை சீண்டியதால் தி.மு.க.வினர் செம்ம டென்ஷனாகி “மீசை முளைக்காத வயதிலேயே அரசியலுக்கு வந்தவர் தளபதி. கல்யாணமான புதிதில் எமெர்ஜென்ஸியில் சிறைக்கு போயி ரத்தம் சிந்தியவர். உள்ளாட்சி துறைக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தவர். இன்னும் சொல்லிட்டே போகலாம். தமிழகம் முழுமையையும் நடந்தே அளந்துட்டு இருக்கிற மனுஷன். இன்னும் சொல்லிட்டே போகலாம். 

அவரைப் பத்தி பேச உங்களுக்கு என்ன அருகதை, தகுதி இருக்குது? தேர்தலுக்கு தேர்தல் கட்சியின் மானத்தை ஏலம் விட்டு, அதிக விலைக்கு எடுக்கிற கட்சிக்காக கூவுற அரசியல் வியாபாரி நீ! எங்க தளபதியை பத்தி பேசுறீங்களா. ஜெயலலிதா புண்ணியத்துல 2011 தேர்தல்ல எதிர்கட்சி அந்தஸ்தை பிடிச்ச உங்க கட்சிக்கு இப்ப சம்பிரதாயத்துக்கு கூட ஒரு எம்.எல்.ஏ. இல்லை. மக்கள் உங்களை அசிங்கப்படுத்தி, வாஷ் - அவுட் பண்ணி அனுப்பியிருக்காங்க. ஆனா நீங்கல்லாம் வாங்குன காசுக்காக எங்க தளபதிக்கு எதிரா கூவுறீங்களா?! ஹீரோவுக்கு எதிரா வில்லன் அ.தி.மு.க. வேணும்னா பஞ்ச் டயலாக் பேசட்டும், காமெடி பீஸு நீங்களெல்லாம் வாயை மூடிட்டு உட்கார்ந்திருக்கணும்.” என்று தங்களின் இணைய தள பக்கங்களில் வெளுத்தெடுக்கின்றனர். கேப்டன் எந்திரிச்சு வாங்க! பொறுத்தது போதும்.