சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொதுமக்களுடன் இணைந்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் பொங்கல் விழாவைக் கொண்டாடி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய விஜயகாந்த், தமக்காகப் பிரார்த்தனை மேற்கொள்ளும் தொண்டர்கள் தான் தமது முதல் கடவுள் என்றும், விரைவில் பூரண உடல் நலம் பெற்று மீண்டு வருவேன் என்றும் உருக்கமாக தெரிவித்தார்.
 
இதனையடுத்து பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது, ’’தேசிய குடியுரிமை சட்ட திருத்த சட்டத்துக்கு எதிராக குரல்கள் எழுந்துள்ளன. அதே போல ஆதரவும் உள்ளது. ஆனால், நாம் சரியாக சிந்தித்து சொல்வோம். இந்தியா என்றால் இந்துக்கள் நாடுதான். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் எல்லா இஸ்லாமிய மதத்தவர்களும், கிறிஸ்துவ மதத்தவர்களும் இங்கு சகோதரத்துவத்துடன் பழகி வருகிறார்கள்’’என்று பேசியுள்ளார். தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா இந்தியா என்றால் இந்து நாடு என்று கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.